‘பெரியார்தான் வேண்டும் என்றும், பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறலாம்’ என சீமான் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு போட்டியாக தேர்தலில் அதிகளவு வாக்குகளை வாங்கி வரும் கட்சி நாம் தமிழர் கட்சி, அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கு ஏராளமான இளைஞர்கள் ரசிகராக உள்ளனர். சீமானின் ஆவேச பேச்சுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே தந்தை பெரியாரை கடுமையாக விமர்சித்து சீமான் பேசி வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். சீமான் வீட்டு முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் சீமானின் பேச்சின் ஈர்ப்பு காரணமாக கட்சியில் இணைந்த தொண்டர்கள். நிர்வாகிகள் தற்போது அடுத்தடுத்து வெளியேறி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் முதல் நிர்வாகிகள், தொண்டர்கள் என விலகி வருகிறார்கள்.

இதனால் நாம் தமிழர் கட்சியின் மற்ற நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ள நிலையில் சீமான் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், ஈரோடு இடைதேர்தலில் டெபாசிட் இழந்தது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளே டெபாசிட் இழந்துள்ளார்கள்.

இந்த தேர்தல் முடிவுகலிலிருந்து நாம் தமிழர் கட்சியினர் ஊக்கமடைந்துள்ளனர். பா.ஜ.க வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு வந்துள்ளது என கூறுவது தவறானது என கூறியவர், பா.ஜ.கவும் அதிமுக வும் நாம் தமிழர் கட்சி வளர வேண்டும் என எப்படி நினைப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

பெரியார் குறித்து ஓவராக நான் பேசிவிட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளார். நான் இப்போது தான் தொடங்கியே இருக்கிறேன். இதுவே ஓவர் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான். பெரியார் ஆதரவு நிலைப்பாட்டில் தான் நான் இருந்தேன். தற்போது ஒரு தெளிவு வந்துள்ளது. பெரியாரின் கொள்கை கொண்டாடப்பட வேண்டிய கொள்கை இல்லை என தெரிந்த பின்பு எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். .எனக்கு தொண்டை சரியில்லாமல் போய் விட்டது இல்லையென்றால் பெரியார் குறித்து இன்னும் அதிகமாக பேசியிருப்பேன் என சீமான் கூறினார்.

மேலும் ஈழத்தில் நேதாஜி படம் இருந்தது எம்ஜிஆர் படம் இருந்தது அங்கு பெரியார் படம் இல்லை விடுதலைப்புலிகள் சாக வேண்டும் என நினைத்தது திராவிடம். பிரபாகரன் உள்ளிட்ட உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் அவரை எதிர்ப்பேன் என உறுதியாக தெரிவித்த சீமான் பெரியார் எங்களுக்கு தேவையில்லை, எனக்கு தேவையில்லை என்னை பின்பற்றுபவர்கள் பெரியார் தான் வேண்டுமென்றால் என்னை விட்டு விலகி செல்லலாம் என கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal