முதலில் பா.ஜ.க., அ.தி.மு.க. பின்னர் ஓ.பி.எஸ். அணி, அதன் பிறகு பா.ஜ.க. மீண்டும் அ.தி.மு.க. என அடுத்தடுத்து கட்சி மாறிய டாக்டர் மைத்ரேயன் உள்ளிட்ட சிலருக்கு அமைப்புச் செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்: அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் செ.ம.வேலுசாமி (முன்னாள் அமைச்சர் கோவை மாநகர் மாவட்டம்), முல்லைவேந்தன் (முன்னாள் அமைச்சர் தருமபுரி மாவட்டம்), டாக்டர் மைத்ரேயன் (தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்), ஆர்.சின்னசாமி ( சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி கோவை மாநகர் மாவட்டம்) ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த பிரபல புற்றநோய் சிகிச்சை நிபுணர் மைத்ரேயன். கடந்த 1991ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் 1999ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் செல்வாக்குடன் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார்.

அதன் பிறகு ஓ பன்னீர்செல்வம் பக்கம் தாவி அவருக்கு ஆதரவாக இருந்தார். இதன் காரணமாக கடந்த ஆண்டு அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருந்து வந்த மைத்ரேயன் திடீரென ஓபிஎஸ் பங்கேற்கும் எந்த நிகழ்விலும் பங்கேற்றாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். பின்னர் 2023ம் ஆண்டு டெல்லியில் பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் மைத்ரேயன் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

எனினும் கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார். இதனையடுத்து சில மணி நேரத்திலேயே, மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அடுத்தடுத்த கட்சி மாறிய மைத்ரேயன் உட்பட நான்கு பேருக்கு அமைப்புச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal