தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தளவில் (தி.மு.க.வாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி) பதவிக்கு வரும் வரையும், தேர்தல் சமயத்திலும்தான் மக்களிடமும், நிர்வாகிகளிடமும் இறங்கி வந்து பேசுவார்கள், பழகுவார்கள். பதவிக்கு வந்தபிறகு அவர்களை மறந்து விடுவார்கள்.

இப்படியான சூழலில்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா செய்த செயல் ஒன்று உடன்பிறப்புக்களை உற்சாகத்திலும், வியப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. ஆலமரத்தடியில் தனியாக உட்கார்ந்திருந்த மூத்த உடன் பிறப்பு ஒருவரை சந்தித்து, நலம் விசாரித்த புகைப்படம்தான் தற்போது உடன் பிறப்புக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில்,

‘‘குறிப்பன் குளம் என்றால் ஐயா தங்கபாண்டியன் அவர்கள்தான். என் தந்தை காலம் முதல் கழகப்பணியில் தன்னை ஈடுபடுத்திகொண்டவர். அமைதியான பண்பாளர். இன்று அவர் ஊரை கடந்து சென்ற போது ஆலமரத்தடியில் அமர்ந்ததை கண்டவுடன் இறங்கி சென்று நலம் விசாரித்தேன்.

எத்தகைய நவீனமயமான வளர்ச்சி வந்தாலும் கிராமத்தில் ஆலமரத்தடியில் அமர்ந்து எங்கள் தென்மேற்கு பருவக்காற்று தரும் உற்சாகம், மகிழ்ச்சிக்கு இணையாகாது. சிறு வயதில் இம்மரத்தடிகளில் கூழாங்கல், ஆடுபுலிஆட்டம், ரைட்டா, ரைட்டா என விளையாடிய ஆட்டங்கள் நினத்தபோது எதையோ தொலைத்துவிட்ட உணர்வே மனதை அழுத்தியது!’’ என பதிவிட்டிருக்கிறார்.

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எந்தவொரு உட்கட்சி பூசலிலும் தலையிடாமல் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார் பூங்கோதை ஆலடி அருணா என்கிறார்கள் தென்காசி உடன் பிறப்புக்கள்.

கல்வி உதவியாக இருக்கட்டும், நலிந்தவர்களுக்கான உதவியாக இருக்கட்டும், தனது கவனத்திற்கு வந்தால் பாகுபாடின்றி உதவி செய்பவர்தான் பூங்கோதை ஆலடி அருணா என்கிறார்கள் ஆலங்குளம் தொகுதி மக்கள்! அவர் பணி தொடர வாழ்த்துக்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal