கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை கவர்னர் மாளிகையில் குடியரசு தினத்தன்று தேநீர் விருந்து நடப்பது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. இதனை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து உள்ளன.
இந்நிலையில், கவர்னர் மாளிகையில் நடக்கும் இந்த விருந்தை புறக்கணிக்க போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் தொடர்ந்து செயல்படுவதால், இந்த தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவித்துள்ளது. தி.மு.க., சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகிஉள்ளது.
கவர்னர் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பு என்று மட்டும் தலைப்பு வைத்திருந்தால் போதும் என்று நினைக்கலாம்-. தி.மு.க.தானே தமிழக அரசு என்று சொல்லலாம். ஆனால், கடந்த முறை தமிழக அரசு புறக்கணித்தது, தி.மு.க. சார்பில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.