கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் வியூக நிபுணர், ‘த.வெ.க.வில் புஸ்ஸி ஆனந்த்தை மீறி உண்மை நிலையை விஜய்யிடம் எடுத்துச் சொல்ல முடியவில்லை’ என்று பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் இன்றைய மா.செ. கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த்தை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, மா.செ.க்களுடன் நேரடி ஆலோசனையில் ஈடுபட்டார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அப்போது கட்சியின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்தும் பொருளாளராக வெங்கட்ராமனும் நியமிக்கப்பட்டனர்.

இவர்களை தவிர மேலும் சில நிர்வாகிகள் நியமனங்கள் நடந்தன. அது போல் மாவட்ட அளவிலும் சில நியமனங்கள் நடந்ததாக தெரிகிறது. இதில் கட்சிக்காக பணியாற்றியவர்களை விட்டு யார் யாருக்கோ பதவி கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதை புஸ்ஸி ஆனந்த் மறுத்தார். மேலும் கட்சி பதவி காரில் வருவோருக்கு கிடைக்காது, சைக்கிளில் வருவோருக்குத்தான் கிடைக்கும் என்றார்.

அதாவது எளிமையானவர்களுக்குத்தான் பதவி கிடைக்குமே தவிர மற்ற கட்சிகளை போல் வசதி படைத்தவர்களுக்கு கிடைக்காது என்றார். தவெகவில் பெண்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என மகளிர் அணியினர் குற்றச்சாட்டு வைத்தார்கள். மாவட்டச் செயலாளர் பதவிக்கு தவெகவின் மாநில பொறுப்பாளர்கள் ரூ 15 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு வழங்குவதாக தகவல்கள் பரவின. இதையடுத்து பணம் பெறும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரித்திருந்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தவெக போட்டியிடவுள்ளதால் கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். இரு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயலாளர்களை நியமிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது. இந்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் நேரடி தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. எதுவாக இருந்தாலும் புஸ்ஸி ஆனந்த் மூலமாகவே நடப்பதாக சில விமர்சனங்கள் வந்தன.

இதையடுத்து தவெக மாவட்ட பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை தனித்தனியே சந்தித்து இன்று விஜய் பேசி வருகிறார். ஆலோசனை நடத்துவதற்கு முன்னதாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோரை வெளியே காத்திருக்குமாறு கூறிவிட்டு விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடந்த தவெக கட்சியின் மாநில மாநாட்டில் கூட விஜய் அந்த இடத்தை விட்டுச் சென்றதும் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்தை நிர்வாகிகள் தூக்கி வைத்துக் கொண்டாடினர். அதாவது விஜய்யை நேரடியாக அணுக முடியாததால் ஆனந்த் மீது நிர்வாகிகள் அதிக அளவில் பாசம் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவரையே வெளியேற்றிவிட்டு விஜய் ஆலோசனை செய்வது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal