தமிழகத்தைப் பொறுத்தளவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வாக்குகளை குறி வைத்துதான் அரசியல் கட்சிகள் தற்போது காய்களை நகர்த்தி வருகின்றன.
காரணம், தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து விழுப்புரத்தில் முதல் அரசியல் மாநாட்டை நடத்தி ஆளும் தரப்பிற்கும், எதிர் தரப்பிற்கும் அதிர்ச்சியை கொடுத்தார் விஜய். காரணம், பல லட்ச இளைஞர்கள் அந்த மாநாட்டில் குவிந்ததுதான்.
இந்த நிலையில்தான் நேற்றுகூட இளைஞர்களின் வாக்குகளை குறிவைக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தி.மு.க.வில் இணைத்தது அக்கட்சித் தலைமை. இதன் பின்னணியில் இருந்து கடந்த சில மாதங்களாகவே வேலை பார்த்தது முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ராஜிவ் காந்திதான். தற்போது தி.மு.க.வில் மாணவர் அணியில் இருக்கிறார்.
இதற்கிடையே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது, அ.தி.மு.க.விற்கு இளைஞர் மற்றும் இளம் பெண்களை அதிகளவில் இணைக்கும் வகையில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை சிறப்பாக செயல்பட்டது. தற்போது, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வில் இளைஞர்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பது அவருக்கே தெரியும்.
இந்த நிலையில்தான் இளைஞர்களை அ.தி.மு.க. பக்கம் இழுக்கும் வகையில் சில நுட்பங்களை கையில் எடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதாவது, கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி, தொடர்ந்து இரண்டாவது முறையாக, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, விஜய்யுடன் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும்போது, ‘மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… பிறப்பால் ஒருவர் முதல்வர் ஆகக்கூடாது…’ என திமுக தலைமை மற்றும் உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்ததை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிகே) தலைவர் தொல் திருமாவளவனை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த டிசம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை, ஆதவ் கட்சியில் இருந்து விலகத் தேர்வு செய்தார். இடைநீக்கத்தில் இருந்தபோது சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று திருமாவளவன் எச்சரித்ததைத் தொடர்ந்து அவர் உடனடியாக ராஜினாமா செய்தார். கட்சியிலிருந்து விலகிய சில நாட்களுக்குப் பிறகு, ஆதவ் அர்ஜுனா முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவில் சேர பேச்சுவார்த்தை நடத்தியாக அப்போதே தகவல்கள் வெளியாகியது.
விஜய் ஏற்கனவே அரசியல் வியூகம் அமைக்க ஒருவரை நியமித்துவிட்டதால் அ.தி.மு.க.வில் சேரதான் ஆதவ் அர்ஜுனாவும் விரும்பினார். 2026 தேர்தலின் போது, அ.தி.மு.க.,வில் இருந்து கொண்டே, அ.தி.மு.க.,விற்கு, வியூகவாதியாக செயல்படுவார் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க அதிமுகவும், விஜய்யின் டிவிகேயும் கூட்டணிக்கு வருவதை உறுதி செய்ய விஜய்யுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக கோவையில் எஸ்.பி.வேலுமணியை ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. விரைவில் ஆதவ் அர்ஜுனா அ.தி.மு.க.வில் இணைய இருக்கிறார். இளைஞர்களை அ.தி.மு.க.விற்கு அதிகளவில் ஈர்க்கும் வகையிலான அசைன்மென்ட்டை எடப்பாடி பழனிசாமி ஆதவ் அர்ஜுனாவிற்கு கொடுத்திருக்கிறாராம்.
இதற்கிடையே, அ.தி.மு.க.வை தங்கள் பக்கம் கொண்டுவந்துவிட வேண்டும் என மீனுக்காக கொக்கு காத்திருப்பது போல பா.ஜ.க. காத்திருக்கிறது. இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா அ.தி.மு.க.வில் இணைந்தால் நிலைமையே வேறாகிவிடுமே என பி.ஜே.பி. மேலிடம் ‘ஷாக்’காகி இருக்கிறதாம். அதனால்தான் ரெய்டுகள் தொடர ஆரம்பித்திருக்கின்றன. மீண்டும் ‘அதிபருக்கும்’ நெருக்கடி கொடுக்கும் முடிவில் இருக்கிறதாம் மேலிடம்!