திருவள்ளூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்றுப்படுகை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில், சட்ட விரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர், அரசு துறை அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொசஸ்தலை ஆறு மற்றும் கனிமவள பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஆர்.வாசுதேவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,

‘‘திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில், கொசஸ்தலை ஆறு பாய்கிறது. பள்ளிப்பட்டு அருகே துவங்கி, வங்க கடலில் கலக்கிறது. பல தசாப்தங்களாக, விவசாய நிலங்களுக்கு, நீர்ப்பாசனத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.சென்னை பெருநகரப் பகுதியில் பாயும் ஆறுகளில் ஒன்றான கொசஸ்தலை ஆறு, எண்ணூர் அருகே கடலில் கலக்கிறது.

மொத்தம் 136 கி.மீ., நீளமுள்ள இந்த ஆறு, வேலூர், சித்தூர், வட ஆற்காடு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களை உள்ளடக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் தொழில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. ஒரு மீட்டர் ஆழம் வரை மணல் அள்ள அனுமதி பெற்று, ஐந்து மீட்டர் அளவு ஆழம் வரை, மணல் அள்ளப்படுகிறது.

அதிகப்படியான அளவு மணல் நூற்றுக்கணக்கான லாரிகள் வாயிலாக, தினமும் எடுத்துச் செல்லப்படுகிறது. சட்ட விரோதமாக மணல் அள்ளுவதால், கிராம மக்கள் மட்டுமின்றி, விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றின் கரைகளை உடைத்து, ஆற்றின் ஆழத்தை அதிகரித்ததன் விளைவாக, நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது.

சட்ட விரோதமாக மணல் அள்ளும் தொழிலை நிறுத்தவும், கொசஸ்தலை ஆறு, ஆற்றுப் படுகை மற்றும் அருகிலுள்ள அரசுப் புறம்போக்கு நிலங்களைப் பாதுகாக்க கோரியும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, பல முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, மாவட்டத்தில் உள்ள மெய்யூர், வேம்பேடு, ராஜபாளையம், சோமதேவன்பட்டு, எறையூர் கிராமங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் கொசஸ்தலை ஆற்றுப் படுகையில், சட்ட விரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதற்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக, சட்ட விரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க, மாவட்ட கலெக்டர், அரசு துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உரிம விதிகளை மீறி, மணல், சவுடு மண் அள்ளுவதை கண்டறிந்தாலோ, சட்ட விரோதமாக மணல் அள்ள அதிகாரிகள் அனுமதித்தாலோ, மனுதாரர் தரப்பு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம். மனு முடித்து வைக்கப்படுகிறது’’ இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal