தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று உதிர்த்த ஒரு வார்த்தைதான் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை!
அதாவது, ‘‘தமிழகத்தில் இளைஞர்களின் வாக்குகளை இழந்து, காணாமல் போகும் கட்சிகள்தான் நடிகர் விஜயை அழைக்கின்றன’’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதான் உண்மையும் கூட..!
ஆம் உண்மைதான். இளைஞர்களே இல்லாத தமிழக பா.ஜ.க.விற்கு அண்ணாமலை தலைவராக பொறுப்பற்ற பிறகு சொல்லிக்கொள்ளும்படியான இளைஞர்கள், இளம்பெண்கள் கட்சியில் இணைந்திருக்கின்றன. தி–.மு.க.விற்கு ஓரளவிற்கு இளைஞர்கள் வாக்குகள் இருக்கிறது. காங்கிரஸ் பற்றி பேசவே வேண்டாம். அங்கு வேட்பாளர்கள் மட்டும்தான் கட்சிக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, ‘இளைஞர்கள் & இளம்பெண்கள்’ பாசறை என்ற ஒன்றை உருவாக்கி அதனை உயிரோட்டமாக வைத்திருந்தார்.
தற்போது விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் இளைஞர்களின் வாக்குகளை ஓரளவு வைத்துள்ள சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் இளைஞர்களின் வாக்குகளை அதிகளவு வைத்துள்ள தி.மு.க. என்ற மாபெரும் இயக்கமும்தான் அச்சத்தில் உள்ளன.
ஆனால், அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவதின் பின்னணி குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் கூட அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு பிறகு ஓரிரு ஆண்டுகளில் இணைந்துவிட்டது. ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்மணி அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆருக்குப் பிறகு இரும்புக்கோட்டையாக வழிநடத்தி வந்தார். எம்.ஜி.ஆரைப் போலவே தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் அ.தி.மு.க. என்ற மாபெறும் இயக்கத்தை அரியணையில் அமர்த்திக் காட்டினார்.
ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியால் அப்படி எதுவும் செய்ய முடியவில்லை. தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறார். இதற்கு பல காரணங்கள் உண்டு.
முதல் காரணம், இணைப்புக்கு முற்றிலுமாக எடப்பாடி பழனிசாமி மறுப்பதுதான். அ.தி.மு.க.வில் 98 சதவீத உறுப்பினர்களும், தொண்டர்களும் எடப்பாடி வசம் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். டெல்டா மாவட்டத்திலும், தென் மாவட்டத்திலும் சசிகலா, டி.டி.வி., ஓ.பி.எஸ். ஆகியோரால் இரண்டு சதவீத வாக்குகள் பிரிகிறது. இந்த இரண்டு சதவீத வாக்குகள்தான் தி.மு.க. ஆட்சி அமைக்க உதவுகிறது.
இதனை புரிந்துகொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி தனது பதவிக்காகவும், தன் மீதான வழக்குகளுக்காகவும் தி.மு.க.விற்கு மறைமுகமாக உதவி வருவதாகவே தெரிகிறது.
தவிர, ஒரு கட்சியின் ஆணிவேரே ஒன்றியச் செயலாளர்கள்தான். அ.தி.மு.க.வில் உள்ள பெரும்பாலான ஒன்றியச் செயலாளர்கள் தி.மு.க.விடம் விலை போய் விடுகிறார்கள். உதாரணமாக திருச்சி, நாமக்கல் மாவட்டத்தில் பொறுப்பாளராக இருக்கும் தங்கமணியின் பெயரை பயன்படுத்திக்கொண்டே பலர் தி.மு.க.விடம் விலைபோய்விடுகிறார்கள். இதனை தங்கமணியும் கண்டுகொள்வதில்லை. இது ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல்தான், மற்ற மாவட்டங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
எடப்பாடி பழனிசாமியால் சாதாரண ஒன்றியச் செயலாளர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியாமல், அவர்கள் கட்சிக்கு செய்யும் துரோகங்களை கண்டும் காணாமல் இருக்கிறார். இதே நிலை நீடித்தால் 2026க்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் இல்லாத அ.தி.மு.க. உருவாக வாய்ப்பிருக்கிறது அல்லது விஜய், அண்ணாமலை, உதயநிதி போன்ற இளைஞர்கள் தமிழகத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கலாம்.
எனவே, அதிமுகவை வாழ வைப்பதும்.. வீழவைப்பதும் எடப்பாடி கையில்தான் இருக்கிறது’’ என்றனர்.