விஜய் தமிழக முதல்வரானால் ஏழை, எளிய மக்கள் அவரை எப்படி சந்திக்க முடியும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபரில் மாநாடு நடத்தி கொள்கை, கோட்பாடுகளை அறிவித்த விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை விஜய் நாளை மறுநாள் சந்திக்க இருக்கிறார்.

இதற்கு அனுமதி வழங்கிய காவல் துறை, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பரந்தூரில் த.வெ.க தலைவர் விஜய் இருக்க கூடாது. பரந்தூர், ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட ஒன்பது கிராம மக்களை மட்டுமே சந்திக்க விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இதற்கே இப்படி என்றால் விஜய் முதல்வரான பிறகு மக்கள் எப்படி சென்று அவரை சந்திப்பார்கள். காமராஜர் செருப்பை மட்டும் போட்டுக்கொண்டு நடந்து சென்று அணை கட்டியவர். அரசியல் கட்சி தொடங்கியவர் மக்களை சந்திக்க செல்ல ப்ரோட்டகால், பாதுகாப்பு என வழங்கினால், எந்த மக்களை அவர் சந்திக்க முடியும்? என்ன குறையைக் கேட்க முடியும்.

மக்கள் சொல்லும் குறைகளை அந்தக் கூட்டத்தில் எப்படி ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். நாளை நீங்க பதவிக்கு வந்து எம்.எல்.ஏ, எம்.பி ஆகிறீர்கள் என்றால் யார் வந்து உங்களை சந்திக்க முடியும்? நான் தமிழக அரசையும், இதுபோன்று சந்திக்க விரும்புவர்கள் என இரு தரப்பினரையும் கேள்வி எழுப்புகிறேன்.

விஜய்யை வரும் காலத்தில் மக்கள் எப்படி அவரது வீட்டுக்குச் சென்று அணுக முடியும், தங்கள் குறைகளை தெரிவிக்க முடியும். ஆக, தமிழக மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்’’ என்றவரிடம், ‘‘விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என செல்வப்பெருந்தகை விடுத்த அழைப்பு விடுத்திருக்கிறாரே?’’ என எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை, “தமிழ்நாட்டில் காணாமல் போகும் கட்சிகள் எல்லாம் விஜயை துணைக்கு அழைக்கிறார்கள். விஜய் மீது வைத்துள்ள நம்பிக்கையை 10 சதவீதம் ராகுல் காந்தி மீது வைக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.

குறிப்பாக அ.தி.மு.க.வில் இளைஞர்கள் இல்லை என்பதையும் மறைமுகமாக சுட்டிக்காட்டிய அண்ணாமலை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாவட்ட ஆட்சியரை இருக்கை மாற்றம் செய்துவிட்டு உதயநிதியின் மகன் இன்பநிதியின் நண்பர்கள் அமர்ந்தது மிகுந்த கண்டத்திற்குரியது என்பதையும் பதிவு செய்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal