நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

‘‘திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் புதிய கல்வி கொள்கையை ஏற்றுகொண்டது, வீடுதோறும் கல்வி என பல விஷயங்களை செயல்படுத்தியுள்ளனர். அதை ஏற்கக் கூடாது என எதிர்த்தவன் நான். ஆளுநருடன் டீ குடிக்கிறீர்கள், எதிர்த்து போராட்டமும் நடத்துகிறீர்கள். காலையில் மகனும், மாலையில் தந்தையும் பிரதமரை சந்தித்தது மாநில வளர்ச்சிக்கா?’’ என ஆவேசமாக பேசியிருந்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்!

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சீமானுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வழக்குப்பதிவும் செய்யப்பட்ட்டுள்ளது.

சீமானின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி சீமானுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பதிவில், சீமான் பெயரை குறிப்பிடாத எம்.பி. கனிமொழி பெரியாருக்கு எதிரான கருத்தியல் கொண்டவர்கள், அவரை எதிர்த்து, எதிர்த்து ஓய்ந்து போகட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘‘பகுத்தறிவு, -சமத்துவம், – பெண் விடுதலை, – அறிவியல் வளர்ச்சி, – தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர்.அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்’’ என்று தி.மு.க.எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal