‘விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் இருக்கும் வரை தமிழக வெற்றிக் கழகம் 2 சதவீத வாக்குகள் கூட வாங்காது’ என தமிழக வெற்றிக் கழகத்தின் வியூக பொறுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசியிருப்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கிய விஜய், களத்தில் இறங்கி வேலை பார்க்காமல் அறிக்கை அரசியலை கையில் எடுத்து வருகிறார் என தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான், ‘புஸ்ஸி ஆனந்த் இருக்கும்வரை தமிழக வெற்றிக் கழகம் 2 சதவீத வாக்குகள் கூட வாங்காது’ த.வெ.க. அரசியல் வியூக பொறுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வெளியாகி தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி..?
திருச்சியை பூர்விகமாக கொண்ட ஜான் ஆரோக்கியசாமி, பல வெளிநாட்டு நிறுவனங்களின் பிராண்ட்-ஐ பிரபலப்படுத்தும் வல்லுநராக இருந்துள்ளார். எம்.ஏ. ஆங்கிலமும், எம்.பி.ஏ.வும் படித்துள்ள ஜான், இன்று பலராலும் தேடப்படும் நபராக வளர்ந்துள்ளார். பிரபல ஆப்பிள் நிறுவனத்துக்கும் பிராண்ட் தொடர்பான ஆலோசனைகளையும் இவர் வழங்கியுள்ளார். மும்பையில் இவர் பெயரில் பெர்சோனா என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. வட மாநில தேர்தல் களங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரஷாந்த் கிஷோர் போலவே இவரின் வியூகங்களுக்கும் கைமேல் பலன் கிடைத்தன.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி மேற்கொண்ட ‘மாற்றம், முன்னேற்றம் அன்புமணி’ என்ற பிரச்சாரத்திற்கு பின்னணியில் இவர் இருந்ததும் இவரே. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, `மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்கிற பிராண்டிங், பா.ம.க-வை திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக முன்னிலைப்படுத்தியது. திறந்தவெளி மேடையில், பிரமாண்ட எல்.இ.டி. திரையில் செயல்திட்டங்கள் விரிய, மார்டன் லுக்கில் அன்புமணி பேசும் ஒவ்வொரு கூட்டமும் இளைஞர்களைக் கவர்ந்தது. இதன்மூலம், அன்புமணியை முதல்வர் வேட்பாளராகப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியவர்தான், இந்த ஜான்.
2019-ல் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வியூக வகுப்பாளராகச் செயல்பட்டிருக்கிறார். அந்தத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் வெற்றியும் பெற்றது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய புரமோஷன் அதிகாரியாகவும், ஐ.நா-வின் பருவநிலை மாற்றத்திற்கான குழுவின் பிரசார ஆலோசகராகவும் பணிபுரிந்த அனுபவம் ஜானுக்கு உண்டு. மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சியில் தொடங்கி, கர்நாடகாவின் சித்தராமய்யா வரையில் பல ஆளுமைகளுடனும் பணியாற்றியுள்ளார்.
தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார் என்கிறார்கள். ஜான் ஆரோக்கிய சாமி, இதுவரை பிரசாந்த் கிஷோரை மட்டுமே அறிந்த தமிழக அரசியல்வாதிகள் இனி ஜான் ஆரோக்கியசாமி பற்றியும் அறியப்போகிறார்கள்!
வெளியான ஆடியோ..?
இந்தச் சூழ்நிலையில் தற்போது ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், “தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய்தான் முகம். அவரையே முன்னிலைப் படுத்தவேண்டும். ஆனால் கட்சித் தொண்டர்கள் புஸ்ஸி ஆனந்தை முன்னிலைப்படுத்துகின்றனர். இவரது அனுமதி இல்லாமல் தொண்டர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். பேனர்களில் இவரது போட்டோவே ஆதிக்கம் செலுத்துகிறது. ஸ்டாலின் இடத்தில் துரைமுருகனை வைத்தால் சும்மா விடுவார்களா? ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை வைக்க முடியுமா? எந்தக் கட்சியிலும் தலைவரோ, நிறுவனரோ யாராக இருந்தாலும், முதல்வர் வேட்பாளர் யாரோ அவர்கள்தான் அக்கட்சியின் முகம். விஜய்யே பிறந்தநாள் கொண்டாடவில்லை. நீங்கள் ஏன் கொண்டாடுகிறீர்கள்? சிறு புள்ளிக்கு கூட இவர்தான் அனுமதி கொடுப்பார்.
நான் ராமதாஸையே வெளியேற்றி அன்புமணியை முன்னிலைப்படுத்தியவன். விஜய் சாரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர், அண்ணா தலைவர்களுக்கு ஈடாக கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். இது பெரிய தவறு. இப்படியே சென்றால் 2% கூடத் தேறாது. கமல்ஹாசன் கூட 4 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவருடைய இடத்தினை இன்னொருவர் அபகரிக்கக் கூடாது.
எம்.ஜி.ஆர்., அண்ணா, ஜெயலலிதா, கலைஞர், ஸ்டாலின், உதயநிதி இவர்கள் தான் மையம். இவர்கள் முகங்களுக்குத் தான் ஓட்டு. அதேபோல்தான் கட்சியில் விஜய் சார் மையம். நீங்கள் யார் என்ன செய்து விட்டீர்கள். உங்களுக்கு ஏன் கிடா வெட்டுகிறார்கள். உங்களுக்காக ஏன் இரத்ததானம் கொடுக்கிறார்கள். நாங்கள் எது பேசினாலும் விஜய் அதை புஸ்ஸி ஆனந்திடம் தெரிவித்து விடுகிறார். ” இவ்வாறு அந்த ஆடியோவில் ஜான் ஆரோக்கியசாமி பரபரப்பாக புஸ்ஸி ஆனந்தை விமர்ச்சித்திருக்கிறார். இந்த ஆடியோ தற்போது தவெக-வினரிடையே வைரலாகி வருகிறது.
இந்த ஆடியோ வெளியான ஒருசில மணி நேரங்களில் புஸ்ஸி ஆனந்த்தை அழைத்த விஜய், ‘கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கொடுக்குமாறு’ உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்துதான் நாளை த.வெ.க. மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.