தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது.

தலைமைத் தேர்தல் கமிஷனின் பரிந்துரையின்படி, பொது மக்களின் ஆய்வுக்கு கிடைக்கும் ஆவணங்களை கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் நடத்தை விதிகள் 1961 ன் விதி 93 ல் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டது. இது தொடர்பான அறிக்கை கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன், தேர்தல் நடத்தை விதி 93(2)(ஏ) பிரிவின் படி, தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும். புதிய திருத்தத்தின்படி சில ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும் என மாற்றப்பட்டு உள்ளது.

திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளின்படி, வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், தேர்தல் முகவர்கள் நியமனம், தேர்தல் முடிவுகள், செலவு கணக்குகள் போன்ற ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும். மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது. இதனால், புதிய சட்டத்திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீபத்திய தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் ஆணையம், அவசர கதியில் தன்னிச்சையாக யாருடன் ஆலோசிக்காமல் முக்கியமான சட்டதிருத்தத்தைமேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.

தேர்தல் நடத்தையின் நேர்மை வேகமாக அழிந்து வருகிறது. இதனை சுப்ரீம் கோர்ட் மீட்டெடுக்க உதவும் என நம்புகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal