‘வளிமண்டல சுழற்சி காரணமாக இந்தியப் பெருங்கடல், தென் கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் இன்று (டிச.,07) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது’ என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், நேற்று முதல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.,07) உருவாகலாம்.
இது, மேற்கு,- வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 12ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தமிழகத்தில் டிசம்பர் 11,12ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’’ இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், பெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.