வருகிற 2026 தமிழக அரசியல் கட்சிகளின் நரித்தந்திர கணக்குகளை ‘வியூங்களாக’ அரசியல் விமர்சகரும், அ.தி.மு.க. கொ.ப.செ.வுமான மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக ‘வியூகங்கள்’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில்,

‘‘பாஜக கூட்டணி வேண்டாம் என்பதில் எடப்பாடி தரப்பு உறுதியாக இருப்பதற்கு உண்மையான காரணம்..?-

சிறுபான்மை மக்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது என்பதை விட பாஜக தனது என்.டி.ஏ. கூட்டாளிகளான ஓ.பி.எஸ். டி.டி.வி. ஆகியோரை அதிமுகவுக்குள் அல்லது கூட்டணியில் ஐக்கியப்படுத்த முயற்சிக்கும் என்பது ஒரு காரணம் என்றால்…

மற்றொரு காரணம்… பாஜகவோடு கூட்டணி வைத்து அவர்களை தமிழகத்தில் வளர்ப்பது நம் இருவருக்குமே நல்லதல்ல..அவர்கள் மெல்ல மெல்ல வியாபித்து வளர்வதை நாம் அனுமதித்தால் திமுக, அதிமுக என்கிற இருதுருவ அரசியல் முடிவுக்கு வந்துவிடும்…

வேண்டுமானால் விஜய்யோடு கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என எடப்பாடிக்கு திமுக தருகிற அழுத்தமும் முக்கியக் காரணமாக இருக்கலாம்..!

இதன் மூலம் திமுக வேறொரு கணக்கையும் போடக்கூடும். அது எடப்பாடி கட்சி விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பாஜக தனது என்.டி.ஏ. கூட்டணியை மூன்றாம் அணியாக முன்னிறுத்தும்.

அதில் ஓ.பி.எஸ் டி.டி.வி. ஆகியோரது தயவோடு பாஜக அணி பிரிக்கும் வாக்குகளை கொண்டு விஜய்யால் தங்களுக்கு ஏற்படும் இழப்பை சமன் செய்து ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்பது திராவிட மாடல் கம்பெனியின் நரிக்கணக்காகும்…

இவற்றுக்கு மத்தியில் எடப்பாடியின் தலைமை அகற்றப்பட்டு அதிமுக வின் எல்லா பிளவுகளையும் ஒன்றுபடுத்தி அதிமுக பங்கேற்போடு பாஜக கூட்டணி வலுவான தோரணமாக போட்டியிடும் பட்சத்தில்…

2016- மக்கள் நலக் கூட்டணியை போல விஜய் மூன்றாம் சக்தியாக போட்டியிட்டு திமுக ஆதரவு வாக்குகளை பதம் பார்த்தால் எடப்பாடி இல்லாத ஒன்றுபட்ட அதிமுக- பாஜக கூட்டணி 2026-ல் ஆட்சியை கைப்பற்றி விடும்…

இதனை சாதித்துக் காட்டுவதற்கு ஆக்ஸ்போர்டு தலைவருக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதே சமகால அரசியல் தட்பவெட்பம் போடுகிற கணக்காக இருக்கிறது..’’ என்று அதில் பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal