‘‘அதானியை முதல்வர் சந்திக்கவில்லை. அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வமாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி, அமெரிக்க கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்தப் புகாரில் தமிழக அரசு பெயரும் பகிரங்கமாக அடிபட்டுள்ளது. அதானி நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தொகைக்கு மின்சாரம் பெறுவதற்காக, தமிழக மின்சார வாரிய அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாகவும், அதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, முதல்வர் ஸ்டாலினும் கோபப்பட்டு பதிலளித்தார்.

இந்த நிலையில், அதானியுடன் முதல்வர் சந்தித்ததாக கூறப்படுவது பற்றி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘தொழிலதிபர் அதானியை முதல்வர் சந்திக்கவும் இல்லை. அந்தத் தனியார் நிறுவனத்துடன் தி.மு.க., ஆட்சியில் ஒப்பந்தம் போடவும் இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் சீர்குலைந்து போன மின்சார வாரியத்தை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால் தலைநிமிர வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி, அடிப்படை உண்மை இல்லாத பொய்க்குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடல்ல.

பிற மாநிலங்களைப் போல தமிழக மின்சார வாரியமும் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளது. எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல. அ.தி.மு.க., ஆட்சியில் தான் அதானியின் 5 நிறுவனங்கள் 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்கான எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

அ.தி.மு.க., ஆட்சி ஒப்பந்தத்தில் கூறிய யூனிட்டுக்கு 7.01 சூரிய ஒளி மின்சார கட்டணத்தை எதிர்த்து தி.மு.க., ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தீர்ப்பு பாதகமாக வந்ததால், அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ரூ.568 கோடி செலுத்த நேரிட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரியத்திற்கு சொந்தமான அனைத்து மின் நிலையங்களில் இருந்தும் முழுமையான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையைப் பொறுத்து, தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் பெறப்படுகிறது. இந்த அடிப்படை தகவல்களைக் கூட அறியாதவர்கள் போல அறிக்கைகள் விட்டு பரபரப்பை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நட்டங்கள் குறைக்கப்பட்டது தி.மு.க., ஆட்சியில் தான் என்பதை சிலர் அறியாமையில் உளறிக் கொட்டும் சில அறிக்கை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க., அரசின் மீது வீண் பழி சுமத்தும் அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ, அ.தி.மு.க.,வையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. அதற்குள் தான் அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி திரைமறைவில் ஒளிந்து கிடக்கிறது. அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வமாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’எனக் குறிப்பிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal