மஹாராஷ்டிராவில் முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில், ‘பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதில்லை’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக, 10 நாட்களாக நிலவி வந்த இழுபறி தொடர்கிறது. தற்போதைய முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே நிதி, வருவாய், உள்துறை இலாக்கா கட்டாயம் வேண்டும் என அடம்பிடிக்கிறார். பட்னவிஸ்சை முதல்வர் ஆக்க பா.ஜ.க,வினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில், மஹாராஷ்டிரா மாநிலம், நாகபுரியில் புத்தக வெளியீட்டு விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: ‘‘அரசியல் என்பது தனக்கு கிடைத்த பதவியில் திருப்தி அடையாதவர்கள் நிறைந்த கடல் போல் உள்ளது. ஒருவர் அரசியலுக்கு வந்து கவுன்சிலர் ஆகிவிட்டால், அடுத்து எம்.எல்.ஏ., ஆக ஆசைப்படுகிறார். இதையடுத்து அவர் அமைச்சர் பதவி வேண்டும் என விரும்புகிறார். அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் வருத்தப்படுகிறார்.

பின்னர் அமைச்சர் பதவி கிடைத்துவிட்டால், நல்ல துறை கிடைக்கவில்லை என்று விரக்தி அடைகிறார். அப்படி நல்ல துறை கிடைத்துவிட்டால், அடுத்து முதல்வராக வேண்டும் என்று ஏக்கம் வந்துவிடுகிறது. முதல்வர் ஆக இருப்பவர்களும் நிம்மதியாக இருப்பதில்லை. கட்சி தலைமை எப்போது வேண்டுமானாலும் தன்னை பதவியில் இருந்து அகற்றலாம் என்ற அச்சத்திலேயே இருக்க வேண்டி உள்ளது’’ இவ்வாறு அவர் பேசினார். மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கும் சூழலில், நிதின் கட்கரி பேசியது முக்கியத்துவம் பெற்று உள்ளது.

தவிர, மாநிலக்கட்சிகளை உடைத்து அங்கு அதிகாரத்தைப் பிடிக்கும் பி.ஜே.பி. தன்னைப் பற்றி யோசித்துப் பார்க்க தவறுவது ஏன் என்பது மாநிலக் கட்சிகளின் குமுறலாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal