நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய சில நிமிடங்களில் அவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை இனி புதன்கிழமை (நவ.27) காலை 11 மணிக்குக் கூடும் என குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன நாள் கொண்டாடப்படுவதால் நாளை நாடாளுமன்ற அமர்வு இல்லை என்பது நினைவு கூரத்தக்கது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை தொடங்கினார். மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்த சபாநாயகர் கோரிக்கை விடுத்ததை அடுத்து அவையில் இருந்த பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து அவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதற்கிடையே அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி மீதான அமெரிக்கா குற்றச்சாட்டு தொடர்பாக குரல் எழுப்பினர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் நாளை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் முழுவதும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மை குழு அறையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பட்டியலில் பஞ்சாப் நீதிமன்றங்கள் (திருத்த) மசோதாவும் இடம்பெற்றுள்ளது. டெல்லி மாவட்ட நீதிமன்றங்களின் மேல்முறையீட்டு அதிகார வரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த இந்த மசோதா வகை செய்கிறது.
முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது பிரதமர் பேசியதாவது: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆக்கபூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அதிகாரப் பசியைக் கொண்ட கட்சியை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர். அந்த விரக்தியில் சில கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைக்கு முயற்சி செய்கின்றன. மக்கள் அவர்களை மீண்டும் மீண்டும் நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எதிர்க்கட்சிகள் எப்போதுமே செயல்பட்டதில்லை. அதுவும், காங்கிரஸ் எப்போதுமே மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசியதில்லை. எதிர்க்கட்சியினர் இனியாவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாடாளுமன்றத்தின் மாண்புகளைப் பின்பற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் பொறுப்புடன் செயல்படக்கூடிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆனால் சில எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. நாடாளுமன்றத்தின் அலுவல்கள் சுமுகமாக நடைபெற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாடாளுமன்றத்தின் அலுவல் நேரத்தை மாண்புடன் பயன்படுத்துவதில் இந்தியாவின் சர்வதேச மரியாதையும் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.