மதுரை அ.தி.மு.க. கள ஆய்வுக் கூட்டம் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் செல்லூர் ராஜுவுக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி அடிதடியில் ஈடுபட்ட சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க.,வின் கிளை, வார்டு, வட்டகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய கள ஆய்வுக் குழு ஒன்றை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நியமித்தார். இந்தக் குழுவில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ,செம்மலை, அ.அருணாச்சலம், பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையடுத்து கடந்த 11-ஆம் தேதி நியமிக்கப்பட்ட குழு சார்பாக, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நியமிக்கப்பட்ட தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கள ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை, கும்பகோணம் கள ஆய்வுக் கூட்டத்தில் மோதல் வெடித்தது. இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டு அடிதடியானது, பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் கே.ராஜூ ஏற்பாட்டில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனைப்படி மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் கள ஆய்வுக்கூட்டம் மதுரை சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்றது. கள ஆய்வு குழு நிர்வாகிகள் முன்னிலையில் துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செம்மலை நிலையில் நடைபெற்று வருகிறது. இந்த கள ஆய்வு கூட்டத்தில் பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் என ஆயிரத்து மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், இதில் ஒரு சில அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பு அதிமுக நிர்வாகிகளை மற்றொரு தரப்பினர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது கருத்துக்களை பேச அனுமதிக்கவில்லை என்பதே முக்கிய குற்றச்சாட்டாக கூறப்படுகிறது.
சீனியர் அமைச்சர்கள் முன்பே நடந்த அடிதடி பிரச்னைகள் குறித்து நடுநிலையான மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் சிலரிட்ம் விசாரித்தோம்.
‘‘சார், மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருக்கும்போது மதுரை அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. ஏன் எடப்படி பழனிசாமி தலைமை பொறுப்பிற்கு வந்தபிறகுக்கூட அப்படித்தான் இருந்தது. ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. காரணம், டாக்டர் சரவணன் வெற்றி பெற்று மதுரையில் கோலோச்சிவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க. அமைச்சருடன் கைகோர்த்து அ.தி.மு.க.விற்கு எதிராக செல்லூர் ராஜு செயல்பட்டார்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 1,665 பூத்கள் உள்ளன. இதில் 113 பூத்தில் தான் அ.தி.மு.க. முன்னிலை பெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் செல்லூர் ராஜு வசம் 966 பூத்கள் உள்ளன. இதில் 60 பூத்தில் கூட அ.தி.மு.க. அதிகவாக்குகளைப் பெறவில்லை. இதற்கெல்லாம் காரணம் செல்லூர் ராஜுதான்.
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்திற்கு சென்றது குறித்து பைக்கார பகுதியை சேர்ந்த செழியன், முனிச்சாலை சரவணன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் உள்பட பலர் காரணம் கேட்டும், சில விளக்கத்தை அளிக்கவும் பேச முன்வந்தனர். ஆனால் செல்லூர் ராஜு யாரையும் பேச அனுமதிக்கவில்லை. முன்கூட்டியே அவருக்கு சாதகமாக பேசுபவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
மதுரையில் டாக்டர் சரவணன் மதுரையில் அதிமுகவில் வளர்ச்சியை எட்டக் கூடாது என நினைக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் சரவணன் வெற்றி பெற்றிருந்தால் அ.தி.மு.க. வளர்ச்சியடைந்திருக்கும். இதனை உணர செல்லூர் ராஜு மறுப்ப ஏன்? மதுரையில் இதே நிலை நீடித்தால், ஒரு சட்டமன்ற தொகுதியில் கூட 2026ல் அ.தி.மு.க வெற்றி பெறாது’’என வேதனையுடன் தெரிவித்தனர்.