காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி. இயைதடுத்து வயநாடு தொகுதியில் அவரது சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பிரியங்கா காந்திமுன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து சிபிஐ மற்றும் பாஜக வேட்பாளர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினராகும் பிரியங்கா காந்திக்கு திமுக எம்பியும் திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் ஆன கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி முன்னணியில் உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கனிமொழி, எதிர்க்கட்சி வரிசையில் மிக துல்லியமாகவும் தைரியமாகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் பேசக்கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பிரியங்கா காந்தி அமர்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
பிரியங்காந்தியை மகிழ்ச்சியோடு வரவேற்பதாகவும் அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதகாவும் கனிமொழி தெரிவித்தார். மேலும் மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தோல்வியை சந்தித்தது குறித்தும் ஜார்கண்ட் தேர்தலில் முன்னிலை வகிப்பது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மக்கள் எதை முடிவு செய்கிறார்களோ அதை நாம் தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.