‘நேற்று மழையில் முளைத்த விஷக் காளான்’ என உதயநிதியை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்ய, ‘ஊர்ந்து ஊர்ந்து போன கரப்பான் பூச்சிகளுக்கு நாங்கள் விஷக் காளான்தான்’ என உதயநிதி பதிலடி கொடுக்க தமிழக அரசியல் களம் அதிர்ந்து போய் இருக்கிறது.
சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘திமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக காட்சி அளித்தன. அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்பட்டன. விவசாயிகளின் நிலங்களை தனியாருக்கு கொடுத்தது திமுக; ஆனால் விவசாயிகளின் நிலங்களை காத்து பாதுகாப்பு கொடுத்தது அதிமுக. விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஏதும் தெரியாது.
‘பழனிசாமி பொறாமையில் பேசுகிறார்’ என உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார். எந்த திட்டமும் கொண்டு வராமல் கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக.
அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பதற்காக என்னைப் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள். பேனா சின்னம் வைக்க மக்கள் வரிப் பணம் ரூ.82 கோடியை கடலில் போடுகிறீர்கள். கட்சி நிதியில் இருந்து செலவு செய்யலாமே.
ஸ்டாலினும், உதயநிதியும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசிக் கொள்கிறார்கள் நேற்று பெய்த மழையில் முளைத்த விஷக்காளான் உதயநிதி; நீங்கள் எனக்கு அறிவுரை கூற வேண்டாம்.
உழைப்பால் உயர்ந்தவன் நான்; உங்களை போல் தந்தையின், தாத்தாவின் அடையாளத்தால் பதவிக்கு வரவில்லை. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை. தொடந்து எங்களை விமர்சனம் செய்தால் தக்க பதிலடி கொடுப்போம். ரெய்டுகளை கண்டு பயப்படுபவன் நான் அல்ல. மடியில் கனமில்லை மனதில் பயமில்லை. எதையும் துணிவோடு எதிர்கொள்ளும் சக்தி அதிமுகவுக்கு உண்டு.
பாஜகவுடன் கூட்டணி வைக்க தான் திமுக முயற்சி செய்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ‘கோ பேக் மோடி’ என சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு வெள்ளைக்குடை வைத்து ‘வெல்கம் மோடி’ என திமுக தான் இரட்டை வேடம் போடுகிறது. பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது திமுக தான். கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க மத்திய அரசின் துணை வேண்டும். நாட்டு மக்களின் தேவை அறிந்து குரல் கொடுக்கும் கட்சி அதிமுக’’ என எடப்பாடி பழனிசாமி உதயநிதியை கடுமையாக சாடினார்.
இந்த நிலையில்தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
‘‘அரசுத்திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித்தலைவர் இ.பி.எஸ்., கேட்டிருந்தார். அதற்கான பதிலை இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நான் கூறியிருந்தேன். அதிலும் சமாதானம் அடையாத எதிர்க்கட்சித் தலைவர் , ஏதேதோ கேள்விகளை மீண்டும் அடுக்கியுள்ளார்.
குறிப்பாக, மக்கள் பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்துக்கு கருணாநிதி பெயரை ஏன் சூட்ட வேண்டும் என்கிறார். 94 வயது வரை தமிழக மக்களுக்காக உழைத்த கருணாநிதி, பெயரை அரசுத் திட்டங்களுக்கு சூட்டுவதில் என்ன தவறு இருக்கிறது. கடந்த காலங்களில், அ.தி.மு.க., ஆட்சியில், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என்றெல்லாம் அரசுத்திட்டங்களுக்கு பெயர்களை சூட்டியது யார்?
கை ரிக்ஷாவை ஒழித்தது முதல் கம்ப்யூட்டர் கல்வியை தந்தது வரை நவீன தமிழகத்தை உருவாக்கிய கருணாநிதி பெயரை அரசுத் திட்டங்களுக்குச் சூட்டுவதும், சிலைகள் எழுப்புவதும் கருணாநிதிக்கு நாம் செலுத்துகிற நன்றியின் வெளிப்பாடு. ‘நன்றி’ என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சித் தலைவருக்கு இது புரியாது. யார் காலைப் பிடித்து முதல்வர் ஆனாரோ, அவரின் காலையே வாரிவிட்ட அவர், நன்றி உணர்ச்சி பற்றி தெரியாத காரணத்தால் இப்படியெல்லாம் பேசுகிறார்.
அவர் வேண்டுமானால், தான் ஊர்ந்து போன டேபிள் – சேருக்கு சிலை வைத்துக் கொள்ளட்டும். நாம் நம்மை ஆளாக்கிய கருணாநிதிக்கு சிலை வைப்போம். அடுத்தது, அப்பா, மகனை பாராட்டுகிறார் ; மகன், அப்பாவை புகழ்கிறார் என்று எதிர்க்கட்சித்தலைவர் வேதனைப் பட்டுள்ளார். அமைச்சர்கள் நாங்கள் மட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசையும், முதல்வரையும் இன்றைக்கு உலகமே புகழ்கிறது. போற்றுகிறது! முதல்வர் ஸ்டாலின் என்னை மட்டுமல்ல, எந்தத் துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அந்தத்துறையின் அமைச்சரின் செயல்பாட்டினை பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
‘தன்னை புகழ யாருமே இல்லையே’ என்ற விரக்தியும், ‘தான் பாராட்ட அ.தி.மு.க.வில் ஆளேதும் இல்லையே’ என்ற ஏமாற்றமுமே எதிர்க்கட்சித்தலைவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ‘நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான்’ என்று என்னை விமர்சனம் செய்திருக்கிறார். ஊர்ந்து போய் பதவி பிடித்த சில கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும், என்றைக்கும் நாங்கள் விஷக்காளான்கள் தான். சமூக நீதிக்கொள்கையால் பண்படுத்தப்பட்டு, திராவிட இயக்கத் தலைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பயிர்கள் நாங்கள்.
எங்களைப் பார்த்தால், ஆரியத்தின் அடிவருடிகளுக்கும், அகற்றி வீசப்பட்ட களைகளுக்கும் ஆத்திரம் வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ‘எதற்கெடுத்தாலும் நான் அனுபவமிக்கவன் – நான் கடந்து வந்த பாதை யாருக்கும் காணக் கிடைக்காது’ என்று தனக்குத்தானே Experience Certificate கொடுத்துக் கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர், நீங்கள் படித்து முடித்து வீட்டில் பத்திரமாக வைத்துள்ள புத்தகங்களின் பட்டியலை எப்போது சொல்வீர்கள்?
நீங்கள் சொன்ன அந்த ‘சேக்கிழ’ ராமாயணத்தை எப்போது தருவீர்கள்? உங்கள் கட்சிப் பெயரில் உள்ள ‘திராவிடம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறிய அறிஞர்களை கண்டுபிடித்துவிட்டீர்களா? இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு எங்களை விமர்சிக்க வாருங்கள். உங்கள் வெற்று வார்த்தைகளும், வீண் சவடால்களும் மக்கள் நலனுக்கான எங்கள் பயணத்தை ஒரு போதும் தடுத்திடாது’’ இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.