சென்னை கொளத்தூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘இன்று புதிது புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும்’’ என நினைப்பதாகக் கூறியிருந்தார். தவெக தலைவர் விஜய்யை தான் முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக விமர்சிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இதற்கு அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், இக்கட்சியின் முதல் மாநாடு கடந்த அக். 27ம் தேதி விழுப்புரத்தில் நடந்தது.

இந்த மாநாட்டில் விஜய் பேசும் போது திமுக குறித்து கடும் விமர்சனங்களைக் கூறியிருந்தார். தங்கள் கட்சியின் சித்தாந்த எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்பது போல விஜய் பேசியிருந்தார். மக்கள் விரோத ஆட்சியைத் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி ஏமாற்றுகின்றனர்.. எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு கலரை எங்கள் மீது பூச முடியாது.. திராவிட மாடல் என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சுரண்டும் குடும்ப சுயநல அரசியல்வாதிகள் என்று கடுமையாகவே விமர்சித்து இருந்தார்.

இதற்கு திமுகவினர் பலரும் பதிலடி கொடுத்தனர். அதேநேரம் டாப் தலைவர்கள் யாரும் நேரடியாக இதில் பதில் தரவில்லை. இந்தச் சூழலில், நேற்று சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக விஜய்யை சாடும் வகையில் பேசியிருந்தார். அதாவது, ‘‘புதிது புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் (ஒருமையில்) தி.மு.க. அழிய வேண்டும், ஒழிய வேண்டும் என நினைக்கிறார்கள். தமிழக மக்களுக்கு நான்கு ஆண்டுகளில் தி.மு.க. செய்துள்ள சாதனைகளை பார்க்கவேண்டும்’’ என விஜய்யை மறைமுகமாக சாடியிருந்தார்.

இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே விஜய்யை தங்கள் சகோதரனாக மகனாக குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார். அந்தளவுக்கு நெருங்கிய உறவையும் அதீத அன்பை வைத்துள்ளனர். அப்படியிருக்கும் போது முதல்வர் ஸ்டாலின் எங்கள் தலைவரைத் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து இருக்கிறார். இது துரதிஷ்டவசமானது. அரசியல் எதிரிகளுக்கு இதுபோல பதில் கொடுப்பது சரியான போக்கு இல்லை.

தமிழ்நாட்டில் தங்கள் குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் எதிரிகளைத் தரக்குறைவாகப் பேசுவது திமுகவின் டிஎனஏவிலேயே இருக்கிறது. முதல்வரின் பேச்சும் அதைத்தான் காட்டுகிறது. 1970களில் ஆண்டு இந்த குடும்ப ஆட்சிக்கு எதிராகவே எம்ஜிஆர் கலகம் செய்தார். இந்த குடும்ப ஆட்சியை அகற்றியும் காட்டினார். வரும் 2026ல் இந்த வரலாறு மீண்டும் திரும்பும். 2026ல் இந்த குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, எங்கள் ஒரு ஜனநாயக ஆட்சியை அமைப்பார்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal