சென்னையில் இன்று (அக்.,25) துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாம் முறையும் பாடப்பட்டது. ‘தவறாக பாடவில்லை. எதுவும் பிரச்னையை கிளப்பிடாதீங்க’ என்றார், துணை முதல்வர்.
அண்மையில், தூர்தர்ஷன் பொன் விழா மற்றும் ஹிந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு விழா, சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நடந்தது. கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடுபட்டது.
இந்த பிழை, தமிழகத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை உருவாக்கியது. தவறுக்கு துர்தர்ஷன் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது. எனினும், கவர்னர் மீது தமிழக முதல்வரும், பிற அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டினர்.
விளக்கம் அளித்த கவர்னர் ரவி, ‘எனக்கும் இந்த சர்ச்சைக்கும் தொடர்பில்லை. நான் விழாவில் பங்கேற்க மட்டுமே செய்தேன். தமிழ்த்தாய் வாழ்த்தை நான் முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன். துல்லியமாக பாடுவேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை ஏற்க மறுத்த முதல்வர் ஸ்டாலின், ‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது, தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். தமிழகத்தையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து கவர்னர் ரவி அவமதித்து வருகிறார்’ என கூறியிருந்தார்.
‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை?
‘பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்’ என விளக்கம் கொடுக்கும் கவர்னர், உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா’ என்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், சென்னையில் இன்று(அக்.,25) நடந்த அரசு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள், சில வார்த்தைகளை தவறான உச்சரிப்பில் பாடியதால் மீண்டும் சரியாக பாடப்பட்டது.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் விளக்கம் அளிக்கும்போது, துணை முதல்வர் உதயநிதி எழுதி வைத்துப்படித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட வில்லை. இது ஒரு டெக்னிக்கல் பிரச்னை. மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு, மூன்று இடத்தில் பாடும்போது குரல் சரியாக கேட்கவில்லை.
இதனால் மறுபடியும் முதலில் இருந்து தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடி இருக்கிறோம். அதன் பிறகு தேசிய கீதமும் ஒழுங்காக பாடப்பட்டு இருக்கிறது. தேவையில்லாமல் மீண்டும் பிரச்னையை கிளப்பி விட வேண்டாம். இவ்வாறு உதயநிதி கூறினார்.