முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மீது கிரிமினல் வழக்கு தொடர, கவர்னர் ரவியிடம், பா.ஜ.க, மாநில செயலர் அஸ்வத்தாமன் அனுமதி கோரியுள்ளார்.
இது தொடர்பாக கவர்னர் ரவியிடம் அவர் அளித்த மனுவில், ‘‘இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் நியமிக்கப்படும் கவர்னரையும்; பதவியையும் அவமதிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் பேசியுள்ளனர். கவர்னர் ரவிக்கு எதிராக இழிவான இனவெறி கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ‘ஆளுனரா, ஆரியரா? திராவிடம் என்ற சொல் நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் கவர்னர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டு பாடச் சொல்வாரா? தமிழக மக்களின் உணர்வுகளை வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் கவர்னரை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்’ என கூறியுள்ளார்.
ஓராண்டுக்கு முன் துணை முதல்வர் உதயநிதி, கவர்னரின் உயரிய மாண்பை குலைக்கும் வகையில் தரக்குறைவாக பேசிய வீடியோ, இப்போது அவரது கட்சியினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், கவர்னர் ரவிக்கு எவ்வளவு திமிர், எவ்வளவு கொழுப்பு. நீங்கள் யார்; உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? கவர்னர் மக்கள் பிரதிநிதி அல்ல; தபால்காரர் மட்டுமே. முதல்வர் பகிர்ந்துள்ள விஷயங்களை மத்திய அரசுக்கு வழங்குவது மட்டுமே கவர்னரின் வேலை.
‘அவர் ஆர்.என்.ரவி அல்ல; ஆர்.எஸ்.எஸ்., ரவி. தமிழ் மக்களிடம் சென்று உங்கள் சித்தாந்தத்தை சொல்லுங்கள். அவர்கள் உங்களை செருப்பால் அடிப்பர்’ என, உதயநிதி பேசியுள்ளார்.
இவை, பாரதிய நியாய சட்டத்தின்படி குற்றமாகும். எனவே, பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதி தொகுப்பு பிரிவு 218ன்படி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் மீது, கிரிமினல் வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.