‘தமிழக அரசியல்’ வெப்சைட்டில் நாளை அமைச்சரவை மாற்றம் என நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இரவில் கவர்னர் மாளிகையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான பத்திரிகை செய்தி வெளியானது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அண்மையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கிறது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர்.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி ஆகியோரின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.ராஜகண்ணப்பனுக்கு பால் வளத்துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன் சுற்றுச்சூழல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள 4 பேருக்கும் என்னென்ன துறைகள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவில் பலரும் கூறிவந்தாலும், அது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக எதையும் அறிவிக்காமல் இருந்தார்.

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு முன்னொருமுறை பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, “நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருக்கிறோம்” என்று மட்டும் பதில் அளித்தார். “தமிழ்நாடு அரசில் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார்” என, தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தாலும், ‘அதற்கான வாய்ப்பு பழுக்கவில்லை’ என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், உதயநிதியை முன்னிறுத்தி மீண்டும் துணை முதல்வர் விவாதம் கிளம்பியது. இதனை உதயநிதி ஸ்டாலினின் நீண்டநாள் நண்பரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உதயநிதி செயல்பட்டு வருகிறார். விளையாட்டுத் துறை அமைச்சர், இளைஞர் நலத்துறை அமைச்சர் என பொறுப்பு வகித்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு அவர் தான் துணை முதலமைச்சர்,” என்றார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, தமிழக துணை முதல்வராக இன்று மாலை 3.30 மணிக்கு நல்ல நேரத்தில் பதவியேற்க உள்ளார். ஜோதிடம்படி, இன்று மாலை 3.15 -& 4.15 மணி வரை நல்ல நேரம் ஆகும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal