வேலூர் சிஎம்சியில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி இன்று (செப்.24) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகியின் மகன் துரை தயாநிதிக்கு கடந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, சிகிச்சையில் இருந்து வந்த துரை தயாநிதிக்கு புனர்வாழ்வு பயிற்சிக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் 14-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சையுடன், புனர்வாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்த துரை தயாநிதியை சிஎம்சி மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த மாதம் 26-ம் தேதி திமுக துணைத்தலைவரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், சிஎம்சி மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி இன்று (செப்.24) காலை 10.30 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் குடும்பத்தினர் துரை தயாநிதியை அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய துரை தயாநிதியை படம் எடுக்க விடாமல் செய்தியாளர்கள், ஒளிப்பதியாளர்கள் மீது மருத்துவமனை ஊழியர்கள் தாக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal