‘முடா’ நில முறைகேடு விவகாரத்தில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரிய கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்ததற்கு எதிராக சித்தராமையா தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இவருக்கு தற்போது முடா முறைகேடு வழக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. முடா என்கிற மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. இந்த வீட்டு மனைகள் ஒதுக்கீடு சட்டவிரோதமானது, முறைகேடானது, என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் இதனை சித்தராமையா திட்டவட்டமாக நிராகரித்து விளக்கம் அளித்தும் வருகிறார். இதற்கிடையே, சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்க கோரி, சமூக ஆர்வலர்கள் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தனர். அந்த மனு குறித்து விளக்கம் அளிக்கும்படி சித்தராமையாவுக்கு ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார். இதைத் தொடர்ந்து, கர்நாட அமைச்சரவை கூட்டம் கூடியது.

இந்தக் கூட்டத்தில் சித்தராமையாவுக்கு அனுப்பிய நோட்டீசை ஆளுநர் வாபஸ் பெற வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டது. இதனை ஆளுநர் நிராகரித்தர். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, தன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிய ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கடந்த மாதம் 19-ந் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீது விரிவான விசாரணை நடைபெற்றது. முதல் நாளிலேயே, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அந்த தடை தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், இன்று தீர்ப்பளித்த கர்நாடக ஹைகோர்ட் சித்தராமையா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநரின் உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம், உறுதி செய்து இருப்பதால் பெங்களூர் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர்கள் தாக்கல் செய்துள்ள மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. இதில் சித்தராமையாவுக்கு எதிரான புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு இருக்கிறது. அதன்படி லோக் அயுக்தா போலீசார் சித்தராமையா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவார்கள். விசாரணை நடத்தி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.

குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்படும். எனினும், சித்தராமையா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை ஆளுநரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு இருந்தால் சித்தராமையாவுக்கு பெரிய நிவாரணமாக இருந்திருகும். அதே நேரத்தில் ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடுசெய்து இருப்பார். ஆனால், ஆளுநரின் உத்தரவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சித்தராமையா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சித்தராமையாவின் பதவிக்கு ஆபத்து கிடையாது என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். காங்கிரஸ் தலைமையும் சித்தராமையாவிற்கு சப்போர்ட்டாக உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal