டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அனைத்து எம்எல்ஏக்களும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) பேசும்போது, “முதல்வர் பதவியை 2 நாட்களில் ராஜினாமா செய்வேன். மக்கள் எனக்கு மீண்டும் வாக்களித்த பிறகு மீண்டும் அப்பதவியில் அமர்வேன்’’ என்றார்.

இதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை கேஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். இதற்காக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் சக்சேனாவை மாலை 4.30 மணிக்கு சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை அளிக்க உள்ளார்.

இதனிடையே, அரவிந்த் கேஜ்ரிவாலும் அவரது முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவும் கேஜ்ரிவாலின் இல்லத்தில் சந்தித்து, டெல்லி அரசை அடுத்து வழிநடத்தக்கூடியவர் யார் என்பது குறித்து விவாதித்தனர். அதனைத் தொடர்ந்து கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூடி விவாதித்தது.

முன்னதாக,”அரவிந்த் கேஜ்ரிவாலைப் போலவே நானும் மக்கள் மன்றத்திடம் போக இருக்கிறேன். தேர்தலில் மக்கள் என் நேர்மையை அங்கீகரித்தால், மீண்டும் நான் பதவியில் அமர்வேன்” என்று மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் எம்எல்ஏகளுடன் நடந்து வரும் கூட்டத்தில், அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயரை அரவிந்த் கேஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவாலால் அடுத்த முதல்வராக முன்மொழியப்பட்டுள்ள அமைச்சர் அதிஷி, டெல்லி அரசின் கேபினட் அமைச்சராக உள்ளார். அவர் தன்னிடம் கல்வித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல முக்கியத் துறைகளைத் தன்னிடம் வைத்துள்ளார். டெல்லியின் கல்காஜி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிஷி கடந்த 2013 -ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வருகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal