‘‘தம்பி விஜய் திராவிட சாயத்தை பூசிக்கொண்டு உள்ளார். அதே சமயம் திருமாவளவனின் மதுவிலக்கு மாநாடு நீர்த்துப் போய்விட்டது.’’ என தமிழிசை சவுந்தர்ராஜன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

பெயர் மட்டும் தான் வைத்திருக்கிறார். அதற்குள் அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பிரமுகர்களும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தை முன் வைத்து பேட்டி அளித்து வருகின்றனர். நேற்றைய தினம் நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன், ஆனால் நடிகர் விஜய் என்னுடன் வந்தால் சேர்ந்து கொள்ளலாம் என்று கூட்டணிக்கு புது விளக்கம் தந்தார் நாம் தமிழர் சீமான்.

இந்த நிலையில்தான் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ‘‘தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கவே அ.தி.மு.க.,வை மது ஒழிப்பு மாநாட்டுக்கு திருமாவளவன் அழைத்தார். தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அவர் நடத்தும் மாநாட்டின் நோக்கம் நீர்த்து போகிறது.

மாநாடு மூலம் ஆட்சிக்கும், கட்சிக்கும் அவர் என்ன அழுத்தம் தரப்போகிறார்? முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் திருமாவளவன் அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. தமது செயல்கள் மூலம் நடிகர் விஜய் திராவிட சாயத்தை இப்போதே பூசிக் கொண்டார்.

தி.மு.க., சாயலில் தமிழகத்தில் இன்னொரு கட்சி தேவையில்லை. அவரின் படம் பல மொழிகளில் வெளியாகலாம், ஆனால் மாணவர்கள் பல மொழிகளை படிக்கக்கூடாதா? 2026ம் ஆண்டு தேர்தலுக்கு இன்னமும் நாட்கள் இருக்கிறது. அதற்கு முன்பாக தேர்தல் கூட்டணி பற்றிய பல கூத்துகள் பார்க்கப்போகிறோம். நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை மத்திய தலைமை தான் முடிவு எடுக்கும்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal