டெல்லியில் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டியில் இரு பெண்கள் உள்ளனர். ஒருவர் முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, மற்றொருவர் கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி என டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுபான ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அக்னி பரீட்சையில் இறங்கி, மக்களின் தீர்ப்பை கேட்கப் போவதாகவும், சட்டசபைக்கு தேர்தலை முன்னதாக நடத்தும்படி கோர உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
‘‘அடுத்த இரண்டு நாட்களுக்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்தி, ஆம் ஆத்மியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார். நான் நேர்மையானவன் என்பதற்கு மக்கள் ஒப்புதல் அளித்தால் தான், தேர்தலுக்குப் பின் முதல்வர் பதவியில் நானும், துணை முதல்வர் பதவியில் மணீஷ் சிசோடியாவும் அமர்வோம்’’ என கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்தார்.