திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டின் பின்னணியில், தி.மு.க.வைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் ஆதவ் அர்ஜுனா இருப்பதாக தற்போது தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி அன்று மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்றும் அதில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்றும் தொல்.திருமாவளவன் அறிவித்திருப்பது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த அறிவிப்புக்கு பின்னால் அரசியல் வியூக வகுப்பாளரும் விசிக துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனா இருக்கிறார்.

திமுகவிற்காக பல மாதங்கள் வியூக வகுப்பாளர்களில் ஒருவராக பணியாற்றியவராக அறியப்படும் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த ஜனவரியில் திருச்சியில் நடத்திய ‘‘வெல்லும் சனநாயகம்’’ மாநாட்டை ஒருங்கிணைத்து அதனை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைத்தவர். அந்த மாநாட்டு மேடையிலேயே அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.

‘‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்” என்ற அமைப்பின் நிறுவனரான ஆதவ் அர்ஜூனா திமுக-வின் மறைமுக வியூக பணிகளில் கடந்த 2016 முதல் 2020 வரை செயல்பட்டவர். 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு நேரடி வியூக வகுப்பாளராக சுனில் என்பவர் பணியாற்றிய நிலையில், அவரோடு இணைந்து செயல்பட்டார் ஆதவ் அர்ஜூனா.

மேலும், திமுக வெற்றி பெற மறைமுகமாக பணியாற்றிய மற்ற வியூக வகுப்பாளர்களான லண்டன் வெங்கட், ஆனந்து என்பவர்களோடும் ஆதவ் அர்ஜூனா இணைந்து செயல்பட்டார். அங்கிருந்து வெளியில் வந்து கடந்த சில மாதங்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காக பணியாற்றி வந்த ஆதவ், விடுதலை சிறுத்தைகளின் நிகழ்ச்சிகள், விழாக்கள், உறுப்பினர் சேர்க்கைக்கான வரையறைகள், இணையதளம் என பலவற்றை அவரது அமைப்பான ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ மூலம் ஒருங்கிணைத்து வந்தார். இந்நிலையில், ஆதவ் அர்ஜூனின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அவரை வைத்தே வெல்லும் சனநாயக மாநாட்டை திருச்சியில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி ஆதவ் அர்ஜூனாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக அறிவித்தார் திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பல வருடங்களாக உழைத்த பலர் இருக்கும்போது, இப்போது வந்த ஆதவ் அர்ஜூனாவிற்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்ததற்கு அந்த கட்சியில் தொடக்கத்தில் சில எதிர்ப்புகள் இருந்தாலும் அவரின் செயல்பாடுகளை அறிந்ததும் அந்த எதிர்ப்பு கானல் நீர் போல் கரைந்துப்போனது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனுக்கும் விழுப்புரத்தில் தனித் சின்னத்தில் நின்ற ரவிக்குமாருக்கும் ஆதவ் அர்ஜூனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ அமைப்பு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றி அவர்கள் இருவரையும் வெற்றி பெற வைத்தது. இதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது. கடந்த முறை விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார் நின்று வென்ற நிலையில், 2021ல் விசிகவின் பானைச் சின்னத்திலேயே அவரை நிற்க வைக்க திருமாவளவன் முடிவு செய்ததற்கு காரணம் ஆதவ் அர்ஜூனினை வியூகங்களை அவர் நம்பியதுதான் காரணம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆதவ் அர்ஜுனாவை பெரம்பலூர் பொதுத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. சார்பில் போட்டியிட எவ்வளவோ முயற்சித்தார் திருமாவளவன். ஆனால், வி.சி.க.வுக்கு இரண்டு சீட்டுதான் என கறார் காட்டியது தி.மு.க. தலைமை!

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் தற்போது அறிவித்திருக்கும் மது ஒழிப்பு மாநாடு ஆதவ் அர்ஜூனாவின் அரசியல் வியூகம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. திமுகவிற்காக அவர் மறைமுகமாக பணியாற்றிய காலங்களில் அவர்களின் செயல்பாடுகள் எப்படியெல்லாம் இருக்கும் என்று அறிந்து வைத்திருக்கும் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக- கூட்டணியில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றவும் தமிழ்நாட்டின் மிகப் பெரியாக மாற்று சக்தியாக எழுச்சிப் பெற வைத்து, அனைத்து சமுக மக்களின் மத்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கொண்டு சேர்க்கும் திட்டமாகவும் இந்த மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஐடியா கொடுத்திருக்கிறார்.

இப்போதெல்லாம் திருமாவளவன் எங்கே சென்றாலும் அவருடன் ஆதவ் அர்ஜூனாவை அழைத்து சென்றுவிடுகிறார் என்கிறது விடுதலை சிறுத்தைகள் வட்டாரம். கூடவே, திருமாவளவனுக்கு ஒரு சாரதி போல, ஆதவ் அர்ஜூனாவே சில நேரங்களில் திருமாவளனுக்காக ஓட்டுநராக இருந்து காரை ஒட்டி வருகிறார் என்றும் தெரிகிறது. இதன் மூலம், திருமாவளவனின் நம்பிக்கைக்கு உரியவராக ஆதவ் அர்ஜூனா மாறியுள்ளார் என்கிறார்கள் உட்கட்சி விபரம் அறிந்தவர்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal