சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இந்த சந்திப்பில் திமுக மற்றும் விசிகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.சந்திப்பின் போது, மதுவிலக்கு தொடர்பாக ஒரு தேசிய கொள்கையை ஒன்றிய அரசு நிறைவேற்ற தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன், “முதலமைச்சரின் அமெரிக்க பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தேன். முதலமைச்சரின் அமெரிக்க பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மதுவிலக்கு தொடர்பாக தேசியக் கொள்கையை உருவாக்க ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் மதுவிலக்கு தேவை என்பதை அண்ணா வலியுறுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் மதுவிலக்கு தேவை என்பதை கலைஞரும் வலியுறுத்தியுள்ளார். அதன்படி, நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்த முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். அக்.2-ல் நடைபெறும் விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கிறது.அக்.2ம் தேதி விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ள மதுவிலக்கு மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மதுவிலக்கு கொள்கையில் திமுகவுக்கு உடன்பாடு உள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து முதலமைச்சரிடம் எதுவும் பேசவில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை 1999 முதலே வலியுறுத்தி வருகிறோம். மதுவிலக்கு மாநாட்டை தேர்தல் அரசியலோடு தொடர்புபடுத்தக் கூடாது.
திமுகவும் விசிகவுக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை; நெருடலும் இல்லை. திமுக கூட்டணியில் தொடர்வதில் உறுதியாகவே இருக்கிறோம். மதுவிலக்குக்காக ஒன்றிய அரசு ஏன் தனி சட்டம் இயற்றக் கூடாது?. மது ஒழிப்பு, போதைப்பொருள் தடுப்பில் ஒன்றிய அரசுக்கு பொறுப்பு உள்ளதா? இல்லையா?. இந்தியா முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு தீவிரமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
மது ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க. பங்கேற்கும் நிலையில், அ.தி.மு.க. பங்கேற்குமா என கேள்வி எழுந்துள்ளது.