நடிகைக்கு தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜெகன்மாகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியின் போது, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அளித்த மோசடி வழக்கில், மாடலும், நடிகையுமான ஒருவரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே, தன் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், கைது நடவடிக்கையின் போது துன்புறுத்தியதாகவும் போலீஸ் அதிகாரிகள் மீது அந்த நடிகை புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் ஆந்திர அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் உளவுத்துறை அதிகாரி சித்தராமா ஆஞ்சநேயலு, விஜயவாடா போலீஸ் கமிஷ்னர் கிராந்தி ரானா டாடா மற்றும் துணை போலீஸ் கமிஷ்னர் விஷால் குன்னி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து ஆந்திர அரசு உத்தரவிட்டது. மேலும், 16 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு ஒருநாளைக்கு இரு முறை நேரில் ஆஜராகுமாறும் மெமோ அனுப்பப்பட்டது.
கடந்த ஏப்ரம் மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் பிரச்சாரத்தின் போது, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் அரசுக்காக, எதிர்க்கட்சியினரின் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்டதாக உளவுத்துறை அதிகாரி சித்தராமா ஆஞ்சநேயலு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.