பாடகர் மனோவின் மாயமான மகன்களை போலீஸார் 5-ஆவது நாளாக தேடி வருகிறார்கள். ஆந்திராவில் தனிப்படை போலீஸார் குவிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. .

சென்னை ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், உணவு வாங்க சென்ற கிருபாகரன் ஆகியோரை மனோவின் மகன்கள் ரஃபி, ஷாகீர் ஆகியோர் முட்டி போட வைத்து உருட்டுக் கட்டைகளால் தாக்கியதாக புகார் எழுந்தது.

இந்த தாக்குதல் குறித்து மனோவின் மகன்களுக்கு எதிரான வீடியோ ஆதாரம் வேறு கிடைத்துள்ளது. இதையடுத்து ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆனால் மனோவின் இரு மகன்கள் உள்பட 3 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள். அவர்கள் ஈசிஆரில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து நேற்று முன் தினம் முதல் அவர்களை தேடி வருகிறார்கள். அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனினும் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து போலீஸார் தேட முயற்சித்து வருகிறார்கள். அவர்களது செல்போன் சிக்னல் மாறி மாறி காட்டி வருவதால் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. அந்த வகையில் இன்று 5-ஆவது நாளாக அவர்களை தேடி வருகிறார்கள். கடந்த 12-ஆம் தேதி ஈசிஆரில் தேடி வந்த நிலையில் 13 ஆம் தேதி ஆந்திராவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.

மனோவின் மகன்களை போலீஸார் தேடி வரும் நிலையில் நேற்று முன் தினம் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 10-ஆம் தேதி எனது மகன்களுடன் வெளியே சென்றோம். அப்போது எங்களை இருவர் குருகுரு என பார்த்தனர். அவர்களிடம் போய், ‘‘எங்களை ஏன் அப்படி பார்க்கிறீர்கள்’’ என என் மகன் கேட்டான். அதற்கு அவர்கள் சினிமாக்காரங்க தான நீங்க, தெலுங்கு கொல்டி போன்ற தகாத வார்த்தைகளை பயன்படுத்தினர்.

உடனே என் மகன், எதுக்குடா இப்படி பேசுறீங்க என கேட்டார். அப்போது அங்கிருந்த ஒரு பையன் ஓடி போய் போன் பண்ணிட்டு வந்தான். உடனே 4 பேர் வந்துவிட்டனர். அவர்களும் எங்களை தகாத வார்த்தைகளில் பேசினார். உடனே நான் சண்டை எல்லாம் வேண்டாம் என சொல்லி என் மகன்களை அங்கிருந்து அழைத்து சென்றேன். அப்போது அவர்கள் கற்களை கொண்டு என்னையும் என் மகன்களையும் தாக்கினர். இதனால் தற்காப்புக்காக என் மகன் உருட்டுக் கட்டையை எடுத்தான். அதன் பிறகுதான் நான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலீஸை வரவழைத்தேன்.

பிறகு என்னுடைய மகன் போலீஸில் புகார் கொடுக்கலாம் என்றான். நான்தான் வேண்டாம் என சொல்லிவிட்டேன். சிறுவர்கள் மீது புகாரளித்தால் அவர்களது வாழ்க்கை வீணாகிவிடும் என சொல்லிவிட்டேன். அடுத்த நாள் என் மகன்கள் மருத்துவமனைக்குள் சென்று வீடு திரும்புவதற்குள் அவதூறு பரப்பிவிட்டனர். இந்த அவமானத்தால் வீட்டிற்கே அவர்கள் வரவில்லை. ஆனால் தலைமறைவாக இல்லை. என் மகன்கள் மது போதையில் இல்லை. எங்கள் பக்கம் தவறில்லை. அதை நிரூபிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal