தமிழகத்தில் மது ஒழிப்பு மாநாடு நடக்க இருக்கும் நிலையில், ‘பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு மணி நேரத்திற்குள் மதுவிலக்கை ரத்து செய்வேன்’ என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உறுதியளித்துள்ளார்.
பூரண மது விலக்கு என்ற கொள்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் மாநிலங்களில் பேசி வரும் நிலையில், இருக்கும் மதுவிலக்கை ரத்து செய்வேன் என்று கூறி வருகிறார் புது கட்சி தலைவரான பிரசாந்த் கிஷோர்.
ஜன் சுராஜ் என்ற தனது அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ள இவர், ‘மாநிலத்தில் தற்போது உள்ள மதுவிலக்கு கட்டுப்பாடுகள் பயனற்றது. அது சட்டவிரோதமாக மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய வழிவகுத்தது மற்றும் மாநிலத்திற்கு ரூ. 20,000 கோடி கலால் வருவாயை இழந்து இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் மேலும் பேசும்போது, ‘‘மாநிலத்தில் தற்போது உள்ள மது மீதான தடையானது நிதீஷ் குமாரின் போலித்தனத்தை காட்டுகிறது. மேலும் மதுவிலக்கு சட்டத்திற்குப் புறம்பாக மதுவை வீடுகளுக்கு டெலிவரி செய்ய வழிவகுத்தது. நான் அக்டோபர் 2 ஆம் தேதி ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியைத் தொடங்குகிறேன். பீகாரில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை நீக்கிவிடுவேன்’’ என்றார்.
நாட்டில் வாக்கு வங்கி அரசியல் படுத்தும் பாட்டைப் பாருங்கள்..!