தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு (தி.மு.க., அ.தி.மு.க.) மாற்றாக துயரங்களை போக்கும் வகையில் அரசியல் கட்சி வருமா என்று மக்கள் எதிர்பார்த்து ஏங்கிக் காத்திருக்கின்றனர். மக்களின் ஏக்கத்தை போக்குவாரா விஜய் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், ‘‘சார், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை தோற்றுவித்தார் விஜயகாந்த். தமிழகத்தில் இருபெரும் ஆளுமைகள் இருக்கும் போதே, அரசியல் கட்சியை ஆரம்பித்து அதில் (எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில் அமர்ந்தார்) வெற்றியும் கண்டார். ஆனால், அது நீடிக்கவில்லை… என்றைக்கு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாரோ, அன்றிலிருந்தே தே.மு.தி.க.விற்கு தேய்பிறைதான்.

காரணம், சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை நோக்கி நாக்கை துருத்தி விஜயகாந்த் பேசியபிறகு, தே.மு.தி.க.வில் விஜயகாந்துக்கு விசுவாசமாக நெடுங்காலமாக இருந்தவர்கள் (நடிகர் அருண்பாண்டியன்) கூட ஜெயலலிதா வசம் சென்றுவிட்டார். பலரை எம்.எல்.ஏ.வாக்கி அழகு பார்த்த விஜயகாந்தால், அவர்களை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. நாளடைவில் உடல்நிலை சரியில்லாமல் போனது, பிறகு மறைந்துவிட்டார். விஜயகாந்த் ஆரோக்கியத்துடன் இருக்கும் போது, தே.மு.தி.க.விற்கு இருந்த மவுசு இப்போது இல்லை. தே.மு.தி.க. யாருடன் கூட்டணிக்குப் போகிறது என இருபெரும் திராவிடக் கட்சிகளுமே காத்திருந்த காலம் கடந்து விட்டது.

அதன் பிறகு ரஜினி அரசியலுக்கு வருவார் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ‘வருவார்… ஆனா வரமாட்டார்…’ என்ற நிலையில் இருந்த ரஜினி, அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துவிட்டார். அவரது ஆதரவும் யாருக்கும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

அதற்கடுத்து நடிகர் கமல்ஹாசன்…

2018 பிப்ரவரி 21ம் தேதி ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை நிறுவினார் நடிகர் கமல்ஹாசன். கடந்த 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல், அதிமுக, திமுக இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வந்தார். 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது.

மக்களவை தேர்தலில் சுமார் 4% வாக்குகளையும் சட்டமன்ற தேர்தலில் சுமார் 2.5% வாக்குகளையும் பெற்றது. மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் சுமார் 1.5 லட்சம் வாக்குகளையும் தென் சென்னை தொகுதியில் சுமார் 1.44 லட்சம் வாக்குகளையும் அக்கட்சி பெற்றது. சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் சுமார் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, மக்களவை தேர்தலில் இக்கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என திமுக அறிவித்தது.

அதேநேரத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், ஒரு மாநிலங்களவை சீட்டுடன் முடங்கியது ஏன் என்ற கேள்வி அப்போது எழுந்தது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி காணாமல் போய்விட்டது.

விஸ்வரூபம் எடுப்பாரா விஜய்..?

நடிகர் கமலை பெரிதாக நம்பியிருந்த நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர். இந்த நிலையில்தான் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியதோடு, கட்சிப் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். விஜயகாந்த், கமல் விட்ட இடத்தை நடிகர் விஜய் பிடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் யாரை எரிச்சல் படுத்தியிருக்கிறதோ இல்லையோ? தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்யின் அரசியல் பிரவேசம் தி.மு.க.வின் கூட்டணிக்குள்ளும் குழப்பத்தை உருவாக்கிவிட்டது. காரணம், திரையுலகில் உச்சத்தில் இருக்கு போதே அரசியல் பிரவேசத்தில் இறங்கிவிட்டார் விஜய். இந்த நிலையில்தான் முதல் மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டார் நடிகர் விஜய்.

செப்டம்பர் 23ஆம் தேதி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதனை ஒத்திவைக்க விஜய் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தேதி தள்ளிப் போனாலும் மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என விஜய் எதிர்பார்ப்பதால் இந்த தாமதம் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

காவல்துறை அளித்துள்ள பல்வேறு நெருக்கடிகளும் மாநாடு தள்ளிப் போக காரணம் ஒரு காரணம். மாநாட்டுக்கு காவல் துறையினரால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் மாநாட்டு பணிகள் தாமதமானதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் அதிமுக, திமுக போன்ற கட்சிகளில் இருப்பது போல அரசியலில் சீனியர்கள் இல்லாதது த.வெ.க. மாநாடு தள்ளிப்போனதற்கு ஒரு காரணம்.

தனக்கு கூடும் கூட்டத்தை மட்டும் பார்க்கக்கூடாது. நடிகர்களுக்கு சாதாரணமாகவே கூட்டம் கூடும். அந்த கூட்டம் அப்படியே வாக்களிக்குமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. திராவிடக் கழகங்களில் ஓரங்கட்டப்பட்ட சீனியர்களை முதலில் விஜய் சந்தித்து, அவர்களை த.வெ.க.வில் இணைக்க வேண்டும். அப்போதுதான் கழகங்களை எதிர்த்து அரசியல் செய்ய முடியும்.

பல்வேறு இன்னல்கள், சிக்கல்களைத் தாண்டி மாநாடு நடத்திவிட்டால் மட்டும் விஜய் அரசியல் களத்தில் சாதித்துவிட முடியாது. த.வெ.க.விற்கு புஸ்ஸி ஆனந்த் மட்டும்தான் அரசியல் பணிகளை கவனித்து வருகிறார். தமிழக அரசியல் களத்தில் மிக மூத்த சீனியர்களை விஜய் கட்சியில் இணைக்க வேண்டும். த.வெ.க.வின் கொள்கைகளை மாநாட்டில் விளக்க வேண்டும். யாரை எதிர்க்கிறோம் என்பதை முதலில் முடிவு செய்யவேண்டும்.

சினிமாவில் ‘நடிப்பது’ வேறு… அரசியலில் ‘நடிப்பது’ வேறு என்பதை விஜய் முதலில் உணரவேண்டும். இதையெல்லாம் தாண்டி, மாநிலத்திலும், மத்தியிலும் ஆளும் கட்சிகள் கொடுக்கும் குடைச்சலுக்கு அசராமல், துணிந்து சென்றால்தான் விஜய்யால் தமிழக அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுக்க முடியும்! எனவே, தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்’’ என்றனர்.

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி அதில் வெற்றி நடை போடுமா ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal