ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து திடீரென தாம் பேசிய பழைய வீடியோவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். பிறகு அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.
மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அவர் அழைப்பு விடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என சரியாக முதல்வர் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்துள்ள நாளில் திருமா பதிவு செய்துள்ளார்.
அந்த பழைய வீடியோவில் தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்தியது கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். அமைச்சரவையில் பங்கு வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும். இதற்கு முன்பு கூட்டணிக் கட்சிகள் இதனை கோரினார்களா என தெரியாது என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோவை அவர் சிறிது நேரத்தில் டெலிட் செய்துவிட்டார். மீண்டும் அதே எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் ஆட்சியிலும் பங்கும் அதிகாரத்திலும் பங்கு கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என குறிப்பிட்டிருந்தார். பிறகு அந்த பதிவையும் அவர் 2ஆவது முறையாக நீக்கிவிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்றுதான் சென்னை திரும்பியிருந்தார். அவர் வந்ததும் வராததுமாக திருமாவளவன் இது போன்ற பதிவுகளை போடுவதும் நீக்கியதும் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியில் பங்கு வேண்டும் என திருமாவளவன் மறைமுகமாக கேட்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரமும் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் அமையும் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என புயலை கிளப்பியிருந்தார்.