அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டது தொடர்பான விவகாரத்தில் கோவை பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

கோவையில் ஜிஎஸ்டி குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் யதார்த்தமாக கொங்கு தமிழில் சில கேள்விகளை கேட்டிருந்தார்.

இதையடுத்து அடுத்த நாளே அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. அதாவது அமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், அன்னபூர்ணா சீனிவாசன் ஆகிய மூவர் இருந்த நிலையில் சீனிவாசன் எழுந்து நின்று கை கூப்பி மன்னிப்பு கேட்ட வீடியோவை யாரோ வேண்டுமென்றே வெளியிட்டு அவரை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து வானதி கூறிய போது அவர் மன்னிப்பு கேட்ட போது பாஜகவினரும் ஹோட்டல் தரப்பினரும் இருந்தார்கள். அவர்களில் யார் வேண்டுமானாலும் அந்த வீடியோவை எடுத்து வெளியிட்டிருக்கலாம் என்றார்.

வயதில் மூத்தவர், கோவையில் முன்னணி தொழிலதிபர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து போட்டது பாஜகவினரே அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவர் சதீஷ் கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார், அன்னபூர்ணா விவகாரத்தில் தவறான தகவலை பரப்பியதற்காக சதீஷ் நீக்கப்பட்டுள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று முன் தினம் தொழில் முனைவோர் உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசிய கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டியில் இருக்கும் பிரச்சினைகளை கோவையின் தொழிலதிபர் அன்னபூர்ணா சீனிவாசன் சுட்டிக் காட்டினார்.

அதாவது ‘‘பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால் பன்னுக்குள் வைக்கும் கிரீம், ஜாமுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது. கிச்சனுக்கு வரும் இன்புட் அதிகாரிகளும் திணறுகிறார்கள். ஒன்று ஒரே மாதிர ஜிஎஸ்டி வைங்க. வரியை ஏற்றிவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இப்படி குழப்பம் வேண்டாம்’’ என காமெடியாக கொங்கு தமிழில் பேசினார். அவர் பேசி முடிக்கும் வரை மற்ற தொழிலதிபர்கள் எல்லாம் சிரித்தனர். இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் பேசுகையில் ‘‘இது போன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் கவலைப்படுவதில்லை’’ என நிர்மலா தெரிவித்தார்.

இந்த நிலையில் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் ஆகியோரை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் சந்தித்து கை கூப்பி மன்னிப்பு கேட்டார். அதிலும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று மன்னிப்பு கேட்டார். மேலும் நான் எந்த கட்சியிலும் இல்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்திவிட்டார்.

இந்த நிலையில் வானதி சீனிவாசன் கூறியிருப்பதாவது: ‘‘எனக்கு சீனிவாசனே நிறைய முறை போன் செய்தார். அப்போது நான் பேசியது தவறுதான், அமைச்சரை சந்திக்க நேரம் கொடுங்கள். நான் வந்து மன்னிப்பு கேட்கிறேன் என்றார். அவரை யாரும் மிரட்டி பணிய வைக்கவில்லை. அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை.

வேண்டுமானால் சீனிவாசனிடமே போய் கேளுங்கள். அவர் மன்னிப்பு கேட்ட வீடியோவை அங்கு இருந்த யாராவது வெளியிட்டிருக்கலாம்’’ என்றார்.

இந்த நிலையில் பாஜக சார்பில் வெளியான வீடியோவுக்கு நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal