‘பெண்கள் நடமாடவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லாத நிலை உள்ளது. தி.மு.க., ஆட்சியில் குற்றவாளிகள் துணிந்துவிட்டனரோ?’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வலைதளப் பக்கத்தில், ‘‘தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நடந்து சென்ற பெண் ஒருவர் லிப்ட் கொடுப்பது போல் பேசி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் பெண்கள் நடமாடவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லாத நிலை உள்ளது.
இதே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாட்டில் கடந்த மாதம் சாலையில் நடந்துகொண்டிருந்த பெண் ஒருவர் 6 பேர் கொண்ட மர்மகும்பலால் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டார். புகார் அளிக்க சென்றால், போலீசார் தன்னை அலைக்கழித்ததாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். பாலியல் வழக்குகளை இவ்வளவு அலட்சியமாக கையாளும் அளவிற்கு நிர்வாகத்தை சீர்கெடுத்துள்ள முதல்வருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
சட்டம் தன்னை ஒன்றும் செய்யாது என்று குற்றவாளிகள் துணிந்துவிட்டனரோ என்று நினைக்கும் அளவிற்கு விடியா திமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வன்கொடுமை வழக்குகளின் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இனி ஒரு நிர்பயா தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது என்ற நோக்கத்துடன் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தி.மு.க., அரசத வலியுறுத்துகிறேன்’’ இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.