தமிழக வனத்துறையில் வடமாநில அதிகாரிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், தமிழக கேடரில் உள்ள அதிகாரிகள் டம்மியாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. ஆன்லைன் இடமாறுதலிலும் முறைகேடு நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் புலம்பித் தவிக்கின்றனர்.
இது தொடர்பாக வனத்துறையில் பணியாற்றும் நடுநிலையான அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், தமிழகத்தைப் பொறுத்தளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.ஸிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஐ.எஃப்.எஸ்.ஸிற்கு கொடுப்பதில்லை. காரணம், ஆட்சி, நிர்வாகம் மற்றும் சட்டம் & ஒழுங்கை இரு அதிகாரிகளும் முக்கிய பங்கு வகிப்பதாக நினைத்து இருதுறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் வனத்துறையில் அதிக முறைகேடுகள் நடப்பதாக, கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் முதல் மேல் மட்ட அதிகாரிகள் வரை புலம்புகின்றனர்.
தவிர, ஆன்லைன் இடமாறுதல்களில் லட்சக்கணக்கில் பணம் கைமாறுவதாகவும் தொடர்ச்சியாக அதிகாரிகள் வட்டாரத்திலேயே புலம்பல்கள் அதிகரிக்கின்றனர். பள்ளிக் கல்வி, காவல்துறை, பொதுப்பணித்துறை என தமிழக அரசின் மற்ற துறைகளில் பொது கலந்தாய்வு முறையிலும், குடும்ப சூழ்நிலை மற்றும் நிர்வாக நலன் கருதி இடமாறுதல் வழங்கப்படுகிறது. வனத்துறையில் மட்டும் ‘ஆன்லைன்’ டிரான்ஸ்பர் என்பதால் ‘இரண்டாம்’ இடத்தில் இருக்கும் முக்கிய அதிகாரி மனது வைத்தால் மட்டும்தான் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கிறதாம். அதுவும் பல லட்சங்கள் கைமாறுவதாகவும் அதிகாரிகள் புலம்புகின்றனர். சிலர் நீதிமன்றங்களை நாடியும், பலர் மருத்துவ விடுப்பிலும் இருக்கின்றனர்’’ என்றனர்.
வனத்துறையில் நடக்கும் இடமாறுதல் மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக முன்னணி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில்தான் இந்த தகவல்களை யார் பத்திரிகைகளுக்கு கொடுக்கிறார்கள் என ‘ஸ்மெல்’ செய்து வருகிறாராம் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரி. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக இடமாறுதல்களை மாற்றி கொடுப்பதை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் பழிவாங்கும் நோக்கில் செயல்பட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்தத் தகவல்கள் தலைமைக்கு சென்றிருக்கிறதாம். அமெரிக்காவில் இருக்கும் முதல்வருக்கும் இடமாறுதல் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ‘நோட்’ அனுப்பியிருக்கிறார்கள். முதல்வர் தமிழகம் திரும்பியதும் ‘அதிகாரம்’ மிக்க அதிகாரிக்கு ‘செக்’ வைக்கப்படும் என்கிறார்கள்.