கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியாக உள்ள மூடா வழக்குக்கு போட்டியாக, முந்தைய பா.ஜ.க, அரசு மீதான ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை சித்தராமையா கையில் எடுத்துள்ளார். இதனால் கர்நாடக பா.ஜ.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
மைசூரில் உள்ள மூடா எனும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கியதில் ரூ.4,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, இந்தத் திட்டத்தின் கீழ் மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டது முதல்வர் சித்தராமையாவுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது.
இதனிடையே, தன் மீதான விசாரணைக்கு கவர்னர் அனுமதி அளித்ததை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு, வரும் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், விசாரணையை தொடர, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் கட்சி மேலிடம் தயாராகி வருகிறது.
இந்த நிலையில், பா.ஜ., தலைமையிலான முந்தைய கர்நாடகா அரசு கொரோனா நிதியை கையாண்ட விதத்தில் புது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதாவது, கொரோனா தொற்று பரவிய சமயத்தில், ரூ.13,000 கோடி செலவிடப்பட்டதில், சுமார் ரூ.1,000 கோடி முறைகேடு செய்யப்பட்டிருப்பதாகவும், பல ஆவணங்களை காணவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீதியரசர் டி.குன்ஹாவின் அறிக்கையில், ரூ.1,000 கோடி வரையிலான பணம் செலவிடப்பட்டதற்கான ஆதாரமில்லை என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை நேற்று கூடியது. அதில், நீதியரசரின் இந்த அறிக்கை குறித்து விவாதித்ததாக சொல்லப்படுகிறது. தனக்கு நெருக்கடி தரும் பா.ஜ.,வுக்கு பதிலடியாக இந்த விவகாரத்தை கிளப்பி விட சித்தராமையா முடிவெடுத்துள்ளார். வரும் நாட்களில் இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் புயல் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.