‘‘பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சர்ச்சைக்குரிய வகைகளில் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சென்னை சைதாப்பேட்டை அடுத்துள்ள அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு என்பவர் நேற்றைய தினம் மாணவ- மாணவிகளிடையே உரையாற்றினார்.
ஆன்மீக தேடல் குறித்துப் பேசிய தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகா விஷ்ணு, தன்னை உணர்தல் என்பது குறித்துப் பேசியிருந்தார். அங்கிருந்த மாணவ- மாணவிகளின் கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கவைத்துள்ளார். அவரது பேச்சைக் கேட்டு பலர் கண்ணீர் விட்டுள்ளனர். நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது, யோக தீட்சை தருகிறேன் என்றெல்லாம் அவர் பேசியுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஒரு ஆசிரியர் மட்டும் வந்து மகா விஷ்ணு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பள்ளியில் வந்து எதற்காக மறு பிறவி, பாவ புண்ணியம் பற்றிப் பேசுகிறீர்கள். அரசுப் பள்ளியில் ஆன்மீகம் குறித்து ஏன் பேசுகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அங்குச் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மற்ற ஆசிரியர்கள் வந்து கேள்வி எழுப்பிய ஆசிரியரை மட்டும் சமாதானம் செய்தனர். மகா விஷ்ணுவும் தனது சர்ச்சை பேச்சைத் தொடர்ந்தார்.
தொடர்ந்த அவர், ‘‘இத்தனை காலம் ஆசிரியர்கள் சொல்லித் தராததை நான் தருகிறேன். நியாயப்படி நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால், என்னுடன் வாக்குவாதம் செய்கிறீர்கள்’’ என்றெல்லாம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். இந்த வீடியோவை மகா விஷ்ணுவே தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
மகா விஷ்ணு என்ற இந்த நபரின் பேச்சு இணையத்தில் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை எப்படி அனுமதிக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதற்கிடையே அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடந்த சொற்பொழிவு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சையாகப் பேசும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சர்ச்சை கருத்துகளைப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் இனி இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், தமிழ்நாடு முழுக்க அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் நடவடிக்கை இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், ‘‘இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். நேற்றைய தினம் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து இங்கே நேரில் வந்துள்ளேன். பள்ளி குழந்தைகளை நேரில் பார்த்துப் பேச உள்ளேன். இந்த விவகாரத்தில் காரணமானவர்கள் மீது அடுத்த 3, 4 நாட்களில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை என்பது மற்றவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் இருக்கும். ஆசிரியர்களையும் நேரில் அழைத்துள்ளேன். அவர்களையும் நேரில் சந்திக்க உள்ளோம். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார்.