நடிகர் விஜய்யின் த.வெ.க முதல் அரசியல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், போலீஸ் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மாநாடு நடத்துவதில் குழப்பம் நீடித்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 2026ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இந்த தேர்தலை குறிவைத்து நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பெயரை பதிவு செய்தவர் அடுத்ததாக கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தில் இருந்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.

குறிப்பாக தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டது. இதனை பலரும் விமர்சித்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என கூடுதலாக க் சேர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து கட்சி கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில் இரு வண்ணங்கள் தங்கள் கட்சியுடையது என புகார்கள் தெரிவிக்கப்பட்டது. கொடியில் இருந்த பூ வாகை பூ இல்லை, தூங்கு மூஞ்சி பூ என விமர்சிக்கப்பட்டது.

இதைவிட ஒரு படி மேலே சென்ற தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி தவெக கொடியில் யானை சின்னம் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தவர்கள், சட்ட நடவடிக்கையை எடுக்கவும் தயாராகி வருகின்றனர். யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு சொந்தமானது எனவும் இதனை வேறு எந்த கட்சியும் பயன்படுத்த முடியாது என வாதிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தான் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தவுள்ளார். இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்ட எஸ்பியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி கொடுப்பது தொடர்பாக இன்னும் காவல்துறை முடிவுவெடுக்காமல் உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விடுமுறை சென்றுள்ளதால் இன்றோ அல்லது நாளையோ மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

இந்தநிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த போலீஸ் அனுமதி மறுக்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக எப்போது மாநாட்டை நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், விஜய்யின் த.வெ.க மாநாடு தேதி மாற்றம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 23ஆம் தேதி அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மாற்று தேதி குறிப்பதற்காக ஜோதிடரை புஸ்ஸி ஆனந்த் சந்தித்ததாக கூறப்படுகிறது.

அக்டோபர், நவம்பர் மாதம் தமிழகத்தில் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்த திட்டமிட்டால் மழை பாதிப்பால் மிக்ப்பெரிய பாதிப்பு ஏற்படும் எனவை இந்த மாதங்களில் மாநாடு நடத்த உகந்தது அல்ல என விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனவே செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் மாநாட்டிற்கான அனுமதி கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal