‘‘சினிமாவில் மட்டும் தான் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறதா, காங்கிரஸ் கட்சியிலும் தான் இருக்கிறது’’என்று புகார் கூறிய கேரள பெண் தலைவர், சில மணி நேரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

கேரள திரையுலகத்தையே கடந்த சில நாட்களாக ஹேமா கமிட்டி அறிக்கை உலுக்கி எடுத்து வருகிறது. திரையுலகில் காலம், காலமாக பாலியல் கொடுமை நடந்து வருவதாக, அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருப்பதே ஒட்டுமொத்த அதிர்ச்சிக்கு காரணம். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து, கேரளா நடிகைகள் தங்களது வாழ்க்கையில் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் சம்பவத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கி வருகின்றனர்.

அந்தவகையில், கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சிமி ரோஸ்பெல் ஜான், ‘திரையுலகில் உள்ள ‘காஸ்டிங் கவுச்’ முறையைப் போன்று காங்கிரஸ் கட்சியிலும் இருக்கிறது. கட்சிக்குள் வாய்ப்புகளை பெறுவதற்காக பெண் உறுப்பினர்கள் பாலியல் சுரண்டலை சகித்து கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆண் தலைவர்களை கவர்வதன் மூலம் மட்டுமே குறிப்பிடத்தக்க பதவியை பெற முடியும். திறமைக்கும், அனுபவத்துக்கும் மரியாதையே கிடையாது. இவ்வாறு அவர் குற்றச்சாட்டினார். அவர் புகார் எழுப்பிய சில மணி நேரத்திலேயே அவரை கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி நீக்கியது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஊடகங்கள் முன்பாக பெண் தலைவர்களை அவமதித்ததற்காக சிமி ரோஸ்பெல்லை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளோம். ரோஸ்பெல்லின் குற்றச்சாட்டுகள் அரசியல் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து காங்கிரஸ் கட்சியில் உள்ள லட்சக்கணக்கான பெண் தலைவர்களை மனரீதியாக துன்புறுத்துவதையும், அவதூறு செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது’’என கட்சி தலைமை குறிப்பிட்டுள்ளது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து, ரோஸ்பெல் நிருபர்களுக்கு சந்திப்பில், ‘‘கண்ணியம் மற்றும் பெருமை உள்ள பெண்களால் இந்த கட்சியில் பணியாற்ற முடியாது’’ என கோபமாக தெரிவித்தார். ரோஸ்பெல்லின் கூற்றுகள் தவறானவை என கேரளா காங்கிரஸ் நிர்வாகி கே.சுதாகரன் மறுத்துள்ளார்.

மேலும், அவர், ‘‘நாங்கள் அவரை நன்கு ஆதரித்தோம். அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பதவிகளையும் வகித்தார். இப்போது ஏன் இப்படி சொல்கிறார் என தெரியவில்லை. அவரது புகார்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்’’என்றார்.

கேரள திரையுலகமே பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளால் அரண்டு போயுள்ள நிலையில், கட்சியிலும் பெண்களுக்கு பாலியல் கொடூரங்கள் நிகழ்வதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal