நாட்டில் சமூக ஊடகங்களின் ஆதிக்கமும், வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டது.
பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் அரசுக்கு ஆதரவாக உத்திரபிரதேச அரசின் திட்டங்கள், சாதனைகள் பற்றிய தகவல்களை பதிவிடுபவர்களுக்கு ரூ.8 லட்சம் வரை ஊக்கத்தொகை அளிப்பது தொடர்பான புதிய சமூக ஊடகங்கள் கொள்கை நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த கொள்கை, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் ஆகியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க, அரசு செயல்பட்டு வருகிறது. நேற்று (ஆக.,27) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், புதிய சமூக ஊடகங்கள் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொள்கையின் மூலம் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
அதாவது, பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தேச விரோத பதிவுகளை போடும் பயனர்களுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின்கீழ் தனியுரிமை மீறல்கள் மற்றும் இணைய பயங்கரவாதம் ஆகிய பிரிவுகளின்படி வழக்கு தொடரப்படும். இனி, தேச விரோத பதிவுகளை இடுபவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலும் வழங்கப்படும். அதேபோல், ஆபாசமான அல்லது அவதூறான விஷயங்களை ஆன்லைனில் பரப்புபவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும்.
- சமூக ஊடகங்களில் அரசுக்கு ஆதரவாக அரசின் திட்டங்கள், சாதனைகள் பற்றிய தகவல்களை பதிவிடுபவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
- எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூபில் பாலோயர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 4 வகைகளாக பிரிக்கப்படுவார்கள்.
- அதில், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அரசின் திட்டங்கள், சாதனைகளை பற்றிய தகவல்களை பரப்புபவர்களுக்கு பாலோயர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாதம், ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம் என ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- யூடியூப்பில், வீடியோக்கள், ரீல்ஸ்கள், குறும்படங்கள் மற்றும் பாட்காஸ்ட்கள் மூலம் வெளியிடுபவர்களுக்கு ரூ.8 லட்சம், ரூ.7 லட்சம், ரூ.6 லட்சம் மற்றும் ரூ.4 லட்சம் என ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.