அமலாக்கத்துறை கைது, சிறைவாசம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் புதிய அறிவுறுத்தல் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க வழிவகை செய்யும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!

அதிமுக ஆட்சி காலமான 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை அமைச்சர்வையில் முக்கிய பொறுப்பில் இருந்தார் செந்தில் பாலாஜி, அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணம் பரிமாற்றம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அதிமுகவில் ஏற்பட்ட அடுத்தடுத்த மாற்றங்களால் திமுகவிற்கு சென்றார் செந்தில் பாலாஜி, அங்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருக்கும் மின்சாரத்துறை வழங்கப்பட்டது.

இந்தநிலையில் அமலாக்கத்துறை நாடு முழுவதும் அரசியல் தலைவர்களை குறி வைத்து காய் நகர்த்திய நிலையில், அமைச்சர் பொறுப்பில் இருந்த செந்தில் பாலாஜி சிக்கினார். நீதிமன்ற உத்தரவின் படி விசாரணையை தீவிரப்படுத்திய அமலாக்கத்துறை பல இடங்களில் சோதனை நடத்திய நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிகாலை நேரத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஒரு வருடமாக ஜாமின் கோரி பல முறை நீதிமன்றத்தின் கதவை தட்டினார். ஆனால் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பின் காரணமாக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காத நிலை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது அமலாக்கத்துறையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமின் தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே சட்ட விரோத பணம் பறிமாற்றம் வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வேறோரு வழக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளது. இல்லையென்றால் சிறையில் அடைக்கப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்கலாம் என கூறியுள்ளது.

மேலும் சட்ட விரோத பண வழக்கில் பிரிவு 45 பிணை வழங்க 2 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென கூறினாலும் ஜாமின் தொடர்பான உரிமைகளை அது பாதிக்காது என உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. (நேற்று கூட அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கே.சி.ஆரின் மகள் கவிதாவிற்கு ஜாமீன் கிடைத்தது)

இந்த புதிய அறிவறுத்தல் காரணமாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே விரைவில் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் தீர்ப்பை திமுகவினர் ஆவலோடு எதிர்நோக்கி காத்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டிலிருந்து திரும்பும் முன்பாக செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வர அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal