தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகப் படுத்திய நிலையில், முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியையும் குறித்திருக்கிறார் நடிகர் விஜய்!
தமிழ் சினிமாவில் 200 கோடி சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகவே தன்னுடைய ஆடியோ லான்ச் மற்றும் பட விழாக்களில் அரசியல் பேசி வந்த நிலையில், கடந்த இரண்டு வருடமாக அரசியலில் தீவிர கவனம் செலுத்த துவங்கினார்.
கடந்த பிப்ரவரி மாதம் திடீரென தன்னுடைய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு… கட்சியின் பெயரான தமிழக வெற்றிக் கழகம் என்பதை தேர்தல் ஆணையத்திலும், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் பதிவு செய்தார்.இதைத்தொடர்ந்து விஜய் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக்கழகம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாது என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை உறுதி செய்தார். அரசியலுக்கு வர உள்ளதால் திரையுலகில் இருந்து முழுமையாக விலகுவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்படி தற்போது விஜய் நடித்து முடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இதைத்தொடர்ந்து இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிப்பார் என அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
தளபதி விஜயின் 69 ஆவது படத்தின் படப்பிடிப்பு பணிகள் இதுவரை துவங்கப்படாத நிலையில், முதல் வேலையாக தன்னுடைய கட்சி பணியில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி ஏற்கனவே தளபதி விஜயின் த.வெ.க கட்சியின் முதல் மாநாட்டை, சென்னை, திருச்சி, போன்ற இடங்களில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில்… அவை ஒரு சில காரணங்களால் நடைபெறவில்லை என கூறப்பட்டது. இதற்கு பின்னனியில் அரசியல் காரணங்களும் உள்ளதாக கூறப்பட்டன.
கடந்த வாரம் தன்னுடைய கட்சி கொடி மற்றும் பாடலை வெளியிட்ட விஜய், தடைகளைத் தாண்டி, தற்போது த.வெ.க கட்சியின் முதல் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ளதாகவும், விஜயின் உத்தரவின் பேரில் மாநாட்டுக்கு அனுமதி கோரி த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளித்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது உறுதியாகி உள்ளது.
மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில். மாநாட்டின் பணிகள் கூடிய விரைவில் துவங்க உள்ளன. மேலும் இந்த மாநாட்டில் சுமார் பத்து லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய முதல் மாநாட்டையே மிகப் பிரமாண்டமாக விஜய் நடத்த திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.