கார் மோதி தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யாநகரைச் சேர்ந்தவர் மஞ்சன் (55). கூலித் தொழிலாளியான இவர், நேற்று இரவு 7.45 மணியளவில் ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெரு,வி.எம்.பாலகிருஷ்ணன் தெரு சந்திப்பில் சாலையோரத்தில் படுத்து உறங்கியிருக்கிறார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மஞ்சன் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்தக் காயமடைந்த மஞ்சனை அங்கிருந்தவர்கள் மீட்டு,ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற மஞ்சன், சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆர் நகர் டி.வி.கே தெருவை சேர்ந்த பாண்டி (25) என்பதும், இவர் பிரபல சினிமா நடிகை ரேகா நாயரிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழப்பு ஏற்படுத்தியதாக பாண்டி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.