முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், ஆட்சிப் பணிகளை தலைமைச் செயலாளரும், கட்சிப் பணிகளை உதயநிதி ஸ்டாலினும் கவனிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டையும் அமெரிக்காவில் இருந்தபடியே ஆன்லைனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்து வருவதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக கோட்டை வட்டாரத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், நேற்று இரவு அமெரிக்காவுக்கு புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். செல்வதற்கு முன்பு இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சரியாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இந்த மாற்றங்களை செய்துள்ளார்.

தமிழக அரசின் விஜிலென்ஸ் கமிஷ்னர் மற்றும் வருவாய் நிர்வாக கமிஷ்னர் ஆகிய 2 பொறுப்புகள் வகித்த கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரை, தமிழக அரசின் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தலைவராக சமீபத்தில் நியமித்தார் ஸ்டாலின். பிரபாகர் மாற்றப்பட்ட நிலையில், அவர் பகித்த 2 பதவிகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில், விஜிலென்ஸ் கமிஷ்னர் பதவியை குடிநீர் வடிகால் வாரியத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரான மணிவாசன் ஐ.ஏ.எஸ்.சுக்கு கூடுதல் பொறுப்பாகவும், வருவாய் நிர்வாக கமிஷ்னர் பதவியை வருவாய்த்துறை செக்ரட்டரியாக இருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்.சிடம் கூடுதல் பொறுப்பாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்திருக்கிறார்.

சமீபத்தில் தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் அதிகாரிகள் மாற்றம் சில நாட்களுக்கு இனி இருக்காது.. என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அடுத்ததாக.. தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த மாற்றம்தான் செய்யப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியே வருவதில் தாமதம் உள்ளிட்ட பல காரணங்கள் காரணமாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படவில்லை.

இதனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில், இங்கே ஆட்சி அதிகாரத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் கிடையாது. ஆனாலும் பெரும்பாலும் நிர்வாகத்தை அவரே பொறுப்பெடுத்து கவனித்துக்கொள்வார். தலைமை செயலாளர் முருகானந்தம் தினசரி பணிகளை கவனிப்பார். நிர்வாக பணிகளை மேற்பார்வையிடுவார். அதே சமயம் ஆட்சி, கட்சி ரீதியிலான பணிகளை உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார். இந்த பணிகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கவனித்துக்கொள்வார்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal