தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக ஐஏஎஸ் முருகானந்தம் நியமிக்கப்பட்டு உள்ளார். பழுத்த அனுபவம் கொண்ட இவர் பல துறைகளில் பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

முதலமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. என்னென்ன பொறுப்புகளை வகித்தார்: பழுத்த அனுபவம் கொண்ட இவர் பல துறைகளில் பணிகளை மேற்கொண்டு உள்ளார். ஐஏஎஸ் தேர்வில் நேரடியாக வெற்றி பெற்று பணிக்கு வந்தவர்.

இவர் 1991-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச். நேரடியாக தமிழக கேடர். விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராக கொரோனா காலத்தில் கூடுதல் பொறுப்பில் என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். அப்போது பணிகளை சிறப்பாக செய்தார். எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது நிதித்துறை செயலாளராக இருந்தார். இவர்தான் ஸ்டாலின் ஆட்சியின் முதல் பட்ஜெட்டை தயார் செய்தார். முருகானந்தம் சென்னைக்காரர். ஸ்டாலினின் குட் புக்கில் இருப்பவர். இவர் சிறப்பாக செயல்படுவதாக சமீபத்தில் அமைச்சர் பிடிஆர் கூட பாராட்டி இருந்தார். முன்பு முதல்வரின் தனி செயலாளர் பொறுப்பில் உதயசந்திரன் இருந்தார். உதயசந்திரன் அதன்பின் நிதித்துறை செயலாளர் பொறுப்பிற்கு மாற்றப்பட்டு அவரின் இடத்திற்கு முருகானந்தம் ஐஏஎஸ்ஸை கொண்டு வந்தனர்.

முருகானந்தம் ஐஏஎஸ் 1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பிஜி கணினி அறிவியல், ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படிப்புகளை இவர் படித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அதோடு பிடிஆர் நிதி அமைச்சராக இருந்த போது அவருக்கு கீழ் இவர் செயலாளராக இருந்தார். கிட்டத்தட்ட இவர்தான் பிடிஆரின் ரைட் ஹேண்ட். பட்ஜெட்டை உருவாக்கியதில் கடந்த 2 வருடங்களில் இவரின் பங்கு முக்கியமாக கருதப்பட்டது.

பிடிஆரே இவரை அழைத்து பாராட்டும் அளவிற்கு இவரின் பணி சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினின் தனி செயலாளர் ஆக உள்ளார். விரைவில் தலைமை செயலாளர் ஆக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை மாற்றும், ஸ்டாலின் வெளிநாடு பயணம், உதயநிதி ப்ரோமோஷன் உள்ளிட்ட பல விஷயங்கள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில்தான் முருகானந்தம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் அந்த பொறுப்பிற்கு முருகானந்தம் வந்துள்ளார். சிவ்தாஸ் மீனா ஒரு காலத்தில் ஜெயலலிதாவிற்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக பார்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார்.

2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் அவருக்கு மாஸ்டார்மைண்டாக இருந்த 4 செயலாளர்களில் ஒருவராக இவர் இருந்தவர். ஆனால் அவர் பணியில் பெரிதாக சோபிக்கவில்லை என்று புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டு உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal