உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், உடுமலை வனச்சரகத்திற்கு 2 அதிகாரிகள் பணியில் இருப்பதால் யாரிடம் புகார் மற்றும் குறைகளை தெரிவிப்பது என அப்பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை வனச்சரகம் உள்ளது. இதில் வனச்சரகராக பணிபுரிந்து வந்த சிவக்குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மணிகண்டன் என்பவர் உடுமலை வனச்சரக அலுவலராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் 3 வருடம் பணிக்காலம் முடியும் முன்பு பணியிட மாறுதல் செய்யப்பட்டதாகக் கூறி சிவக்குமார் வனத்துறைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சிவக்குமார் உடுமலை வனச்சரக அலுவலகராக தொடர்தவற்கு கோர்ட்டு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அந்த உத்தரவின் அடிப்படையில் சிவக்குமார் உடுமலை வனச்சரக அலுவலகராக பணியை தொடர்கிறார்.
ஆனால், அங்கு ஏற்கனவே பணி அமர்த்தப்பட்ட மணிகண்டனும் உடுமலை வனச்சரக அலுவலராக பணியை தொடர்கிறார். ஒரே வனச்சரக அலுவலகத்தில் இரண்டு வனச்சரக அலுவலர்கள் தனித்தனியாக பணிபுரிவதால், பொதுமக்களும், விவசாயிகளும் யாரிடம் குறைகளை தெரிவிப்பது என குழப்பத்தில் உள்ளனர்.
வனவிலங்குகளை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் கோடிகளில் நிதிகளை ஒதுக்கியும், இப்படி அதிகார மோதலால் எல்லாமே பாழ்பட்டுப் போகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இது பற்றி வனத்துறையில் பணியாற்றும் சில நேர்மையான அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘சார், வனத்துறையில் பணியிட மாறுதல்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கைமாறுகிறது. அப்படி கொடுத்தால் மட்டுமே நினைத்த இடத்திற்கு பணிமாறுதல்களை பெற முடிகிறது.
தவிர, உயர்நீதிமன்றத்தில் உத்தரவை பெற்ற சிவக்குமார், இன்னும் சம்பளம் வாங்காமலேயே உடுமலை வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். உயர்நீதிமன்ற உத்தரவையே வனத்துறை அதிகாரிகள் மதிக்காமல் செயல்பட்டு வருகின்றனர். இதைவிடக் கொடுமை தமிழகத்தில் தமிழக அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது. வடமாநில அதிகாரிகள்தான் கோலோச்சி வருகிறார்கள்’’ என்று வேதனையுடன் நம்மிடம் தெரிவித்தார்.